முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முருக்கேரி கிராமத்தில் திண்டிவனம் - மரக்காணம் மாநில நெடுஞ்சாலையில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 42 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பிரசவமும் பார்க்கப்படுகிறது.
நகை, பணம் பறிப்பு சம்பவம்
ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் சிலர் சுகாதார நிலையத்திற்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மர்மநபர்கள் அங்கு பணியாற்றும் செவிலியர்களிடம் நகை, பணம் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக டாக்டா்கள், செவிலியர்கள், நோயாளிகள் ஒருவித அச்சத்துடனே அங்கு இருக்கின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி, முருக்கேரி ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.