புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?; வியாபாரிகள் எதிர்பார்ப்பு
புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா? என வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆயத்த ஆடைகளின் உலகமாக திகழும் புதியம்புத்தூர் 'குட்டி ஜப்பான்', 'தென்னகத்தின் திருப்பூர்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
ஆயத்த ஆடை நிறுவனங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்கும் இங்கு 350-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாடு விடுதலைக்கு பின்னர் 1947-ம் ஆண்டு புதியம்புத்தூரில் அழகுசுந்தரம் நாடார் என்பவரால் 4 தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்ட ஆயத்த ஆடை நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து இங்கு பலரும் பல தலைமுறைகளாக வாழையடி வாழையாக ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடி வருகின்றனர்.
மூலப்பொருட்களின் விலையேற்றம், பெருவணிக நிறுவனங்களின் போட்டி, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடியான காலக்கட்டங்களிலும் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யாமல், மக்கள் மனம் விரும்பும் வகையில் கண்கவர் ஆடைகளை தயாரித்து வழங்குவதையே குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிறுவர்களுக்கான சட்டைகள், ஜீன்ஸ், டி-சர்ட், சூட்ஸ், பைஜாமா, ஷெர்வாணி, சிறுமிகளுக்கான பிராக், கவுன், குர்திஸ், லெகிங்ஸ் போன்ற அனைத்து வகையான ஆடைகளையும் தயாரிக்கின்றனர். இதனால் புதியம்புத்தூர் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது.
ஜவுளி பூங்கா
புதியம்புத்தூரில் ஜவுளி தொழிலை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து ஆயத்த ஆடை நிறுவனங்களின் புத்தாடைகளையும் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அந்த கோரிக்ைக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
கண்கவர் டிசைன்கள்
புதியம்புத்தூர் அனைத்து ரெடிமேடு உற்பத்தியாளர்கள், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜெகதீசன்:-
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் புதியம்புத்தூருக்கு வந்து ஆயத்த ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். தற்போது சிறுவர், சிறுமிகளுக்கான ரெடிமேடு ஆடைகள் முதல் பெரியவர்களுக்கான அனைத்து ஆடைகளையும் தயாரித்து வழங்குகிறோம். இதற்காக சூரத், ஆமதாபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று தரமான துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகிறோம். மேலும் காலத்துக்கு ஏற்ப ஆடைகளில் நவீன கண்கவர் டிசைன்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறோம். மாணவ-மாணவிகளின் சீருடைகளையும் பள்ளிக்கூடங்களுக்கு மொத்தமாக தயாரித்து வழங்குகிறோம்.
திருப்பூர், ஈரோட்டில் இருப்பது போன்று புதியம்புத்தூரிலும் ஜவுளி பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும். இதில் இங்குள்ள அனைத்து நிறுவனங்களின் புத்தாடைகளையும் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்துவதின் மூலம் ஏராளமான வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வதற்கு எளிதாக இருக்கும். அதிக விற்பனை மூலம் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வழங்க முடியும்.
வேலைவாய்ப்பு
ஜவுளி உற்பத்தியாளர் கண்ணன்:-
தையல் தொழிலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுவதால், பல்வேறு கிராமங்களிலும் தையற்கூடங்களை அமைத்து, அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறோம். இவ்வாறு விளாத்திகுளம், புதூர், அருப்புக்கோட்டை, கன்னிராஜபுரம், நரிப்பையூர், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தையற்கூடங்களை அமைத்து கொடுத்துள்ளோம். ஆயத்த ஆடை உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைப்பதுடன் வாரச்சந்தையும் தொடங்கினால் வியாபாரம் செழித்தோங்கும். மேலும் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ரெயில் நிலையம்
ஜவுளி ரெடிமேடு வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் ராஜா:-
புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மானியத்தில் கடனுதவி வழங்க வேண்டும். மேலும் மின்சார மானியம், ஆயத்த ஆடைகளுக்கு ஏற்றுமதி மானியம் வழங்க வேண்டும். வியட்நாம், வங்காளதேசம் போன்ற நாடுகளை போன்று ஜவுளி உற்பத்திக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். பருத்தி நூல், பல்வேறு ரக துணிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
பெருகி வரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப புதியம்புத்தூர் ஊராட்சியுடன் சாமிநத்தம், ராஜாவின்கோவில் பகுதிகளை இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் வழியாக ஓட்டப்பிடாரத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். தூத்துக்குடி- அருப்புக்கோட்டை இடையே அமைக்கப்படும் ரெயில் பாதையில் புதியம்புத்தூர் அருகில் சில்லாநத்தத்தில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். இதன்மூலம் வெளிமாநில வியாபாரிகள் ரெயிலில் எளிதில் புதியம்புத்தூருக்கு வந்து செல்ல முடியும்.
தையல் பயிற்சி பள்ளி
தையல் தொழிலாளி செந்தில்குமார்:-
ஆயத்த ஆடை நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று புத்தாடைகளை தயாரித்து வழங்குகிறோம். இதற்காக ஒவ்வொரு ஆடைக்கும் கூலி கணக்கிட்டு வழங்குகின்றனர். குறைந்தளவு வருமானமே கிடைத்தாலும் தரமான ஆடைகளை தயாரித்து வழங்குகிறோம் என்ற மனதிருப்தி கிடைக்கிறது. விழாக்காலங்களில் மட்டுமே அதிகளவு ஆர்டர் கிடைக்கிறது. மற்ற காலங்களில் போதிய ஆர்டர் கிடைக்காததால் வருமானமின்றி வறுமையில் வாடுகிறோம்.
எனவே தையல் தொழிலாளர்களை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் இணைத்து போதிய நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். புதியம்புத்தூரில் அரசு தையல் பயிற்சி பள்ளி மற்றும் பேஷன் டிசைனிங் பயிற்சி நிறுவனங்களை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.