வாகனங்களில் பெட்ரோல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?


வாகனங்களில் பெட்ரோல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் வாகனங்களில் பெட்ரோல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் வாகனங்களில் பெட்ரோல் திருடுபவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெட்ரோல், டீசல் திருட்டு

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்து விற்பனையாகிறது. பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையும் சதத்தை நெருங்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்தநிலையில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மலைப்பிரதேசமான நீலகிரியில் பெரும்பாலும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை வீட்டுக்கு முன்பு அல்லது அருகிலோ நிறுத்தி விடுகின்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது, சில இடங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல், டீசல் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர்.

கைது செய்ய வேண்டும்

ஊட்டியை சேர்ந்த முஸ்தபா:-

நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி என்பதால் வாகனங்களை நிறுத்துவதற்கு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இடவசதி கிடையாது. இதனால் வசதியானவர்களை தவிர பெரும்பாலானவர்கள் தங்களது வாகனங்களை வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் அல்லது சாலைகளில் நிறுத்தி செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் வாகனங்களில் பெட்ரோல், டீசலை திருடி விடுகின்றனர்.

குறிப்பாக இந்த சம்பவங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுத் வீக் பகுதியில் 5 லிட்டர் பெட்ரோல் திருடி சென்ற ஒரு நபரை கையும், களவுமாக பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பினோம். இதேபோல் பலரும் ஆங்காங்கே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது நீலகிரியில் எரிபொருள் திருட்டு சம்பவம் ஆங்காங்கே மட்டும்தான் நடக்கிறது. இருப்பினும், போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள்

கோத்தகிரி சிவசுப்பிரமணியம்:-

கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டானிங்டன் செல்லும் சாலையில், குடியிருப்புக்கு அருகே வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை. இதனால் குன்னூரில் இருந்து பணி முடிந்து வரும்போது, தினமும் இரவில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரம் எனது காரை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். ஆனால், காலையில் பார்க்கும் போது காரில் இருந்து பெட்ரோல் திருடி இருப்பது தெரியவந்தது. இதேபோல் பலமுறை திருட்டு நடந்ததால், அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காரை நிறுத்தி வருகிறேன்.

தற்போது காரில் இருந்து பெட்ரோல் திருடுவது குறைந்து விட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா வாகனத்தில் இருந்து ஸ்பீக்கர் மற்றும் டேப் ரெக்கார்டர் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கைது செய்தனர். தற்போது பெட்ரோல் மற்றும் வாகனங்களில் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி செல்வதைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் பெட்ரோல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

சிக்கனமாக பயன்படுத்துகிறோம்

குன்னூர் அருகே வண்டிசோலையை சேர்ந்த வினோத்குமார்:-

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டி இருக்கிறது. பணி முடிந்து வந்து, இரவு நேரத்தில் வீட்டின் அருகில் கார் போன்ற வாகனங்களை நிறுத்தி வருகிறோம். பெரும்பாலானோர் சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடி விடுகின்றனர். இதை அறியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் நடுவழியில் நிற்கும் நிலை உள்ளது. கன்டோன்மெண்ட் பகுதிகளில் இன்னும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வில்லை. பெட்ரோல் திருட்டு மட்டுமின்றி, கோவில்களிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு நடந்து உள்ளது. எனவே, திருட்டை தடுக்க நிர்வாகம் கிராம பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

ஊட்டி குணசேகரன்:-

20 வருடங்களுக்கு முன்பு வீடுகளில் சைக்கிள் தான் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தது. தற்போது மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து விட்டது. குறிப்பாக வேலை மற்றும் கல்லூரிக்கு செல்லும் வகையில் வீடுகளில் 2-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. இதனால் எல்லா வாகனங்களையும் பாதுகாப்பாக வீட்டிற்குள் நிறுத்த முடியாது. இடவசதி இல்லாததால் வீட்டிற்கு வெளியில் நிறுத்தும்போது, சில நேரங்களில் பெட்ரோல், டீசல் திருடப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் திருடு போவது குறையும்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து நீலகிரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர் அதிகம். இங்கு சமவெளி பகுதிகளில் நடமாடுவது போல் பொதுமக்கள் இரவில் நடமாட முடியாது. அதே சமயத்தில் வனவிலங்குகள் தொல்லையும் இருப்பதால் இரவு நேரங்களில் திருட்டு என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது.

பொதுவாக குற்ற சம்பவங்களை பொறுத்தவரை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகவும் குறைவு. அதில் பெட்ரோல், டீசல் திருட்டு சம்பவங்கள் என்பது அதைவிட மிகவும் குறைவாக உள்ளது. இருந்தாலும் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் இதுபோன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story