பழைய நடைமுறையில் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?


தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சர்வர் கோளாறால் தினமும் அவதிப்படுவதால், பழைய நடைமுறையில் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பாப்பில் உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

ஆன்லைன் பத்திரப்பதிவு முறையில் சர்வர் கோளாறு ஏற்படும் பட்சத்தில், பழைய நடைமுறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆன்லைனில் பத்திரப்பதிவு

தமிழகம் முழுவதும் சுமார் 545 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரப்பதிவு முறை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சர்வரில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவதால் பத்திரப்பதிவுக்காக வந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இரவு வரை பத்திரப்பதிவுக்காக மக்கள் காத்து நிற்கின்றனர். அதிகாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சர்வர் கோளாறுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பத்திரப்பதிவில் தாமதம்

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆவண எழுத்தர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் என்ற சிவசங்கரராமன் கூறும்போது, 'தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு வசதி தொடங்கப்பட்டது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துதல், டோக்கன் பெறுதல் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலமே செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினந்தோறும் பத்திரப்பதிவுக்கான சர்வர் சரிவர இயங்கவில்லை. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சராசரியாக சாதாரண நாட்களில் 100 பத்திரங்கள் வரை பதிவாகி வருகின்றன. மக்கள் நல்ல நேரம் பார்த்து பதிவு செய்ய வருகிறார்கள். ஆனால் சர்வர் கோளாறு காரணமாக மக்கள் விரும்பிய நேரத்தில் பதிவு செய்ய முடியவில்லை. வெளியூர்களில் இருந்து வருபவர்களும் நாள் முழுவதும் காத்து கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சர்வர் கோளாறால் பத்திரப்பதிவு தாமதம் ஆகிறது. வங்கி கடன் அனுமதி பெறுபவர்கள், விடுப்பு எடுத்து பத்திரப்பதிவுக்காக வருபவர்கள், சொத்துக்களை வாங்க பணம் செலுத்தியவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவு சர்வர் கோளாறு ஏற்படும் நேரத்தில் பழைய நடைமுறைப்படி பத்திரங்களை பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் உருவாக்கி கொடுக்க வேண்டும். அதேபோன்று சர்வரின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும்' என்றார்.

காத்திருக்க வேண்டிய அவலம்

தூத்துக்குடியை சேர்ந்த சுப்பையா என்ற சங்கர் கூறும்போது, 'பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடக்கிறது. கடந்த 2 வாரங்களாக பத்திரப்பதிவுக்கான சர்வர் வேகம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். நாள் முழுவதும் காத்திருந்துதான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. வெளியூர்களில் இருந்து வந்து காத்திருந்து பத்திரப்பதிவு செய்ய முடியாமல் திரும்பி செல்ல வேண்டிய அவலமும் உள்ளது. ஆகையால் ஆன்லைன் வசதி பாதிக்கப்படும்போது, பழைய நடைமுறையில் நேரடியாக பத்திரப்பதிவு முடித்த பிறகு, பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்திலேயே ஆன்லைனில் ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்தால் மக்கள் சிரமம் குறையும்' என்றார்.

அடிப்படை வசதி

தூத்துக்குடியை சேர்ந்த ராகவன் கூறுகையில், 'தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பறை சரிவர பராமரிக்கப்படாமல் சுகாதார கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ளது. அதனை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஜெனரேட்டரை மின்வெட்டு நேரத்தில் உபயோகப்படுத்த வேண்டும். பத்திரப்பதிவு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. பொதுமக்கள் நல்லநாள் பார்த்து பத்திரப்பதிவு மேற்கொள்கிறார்கள். ஒரே நேரத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு செய்யும்போது, சர்வர் முடங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் இணையதள சர்வர் வசதியை அதிகரிக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கொடுக்கப்பட்டு உள்ள தடங்கல் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் முதல் தளத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வருவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரே நேரத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடக்கும்போது சர்வர் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. அதன் வேகத்தை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.


Next Story