ஆதித்த சோழன் சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படுமா?


ஆதித்த சோழன் சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படுமா?
x

ஆதித்த சோழன் சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படுமா?

திருவாரூர்

பிற்கால சோழர் பேரரசுக்கு அடிகோலியவர் விஜயாலய சோழன். இவரது மகன் ஆதித்த சோழன். ஆதித்த சோழனுக்கு கி.பி. 871-ம் ஆண்டில் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது. இவர்களது காலத்தில் திருவாரூர், நாகை, நன்னிலம், தஞ்சாவூர், மன்னார்குடி, வலங்கைமான், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில் கோவில்களை கட்டி நிலம் உள்ளிட்டவைகளை தானமாக வழங்கி உள்ளனர். அதன்படி ஆதித்தமங்கலத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கோவிலில் ஆதித்த சோழன் சிற்பத்தையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் கோவில் அழிந்து விடவே அந்த சிற்பத்தை காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள தெருவோர சிறிய சன்னதியில் வைத்து வழிபட்டு வருகின்றனர். 3 அடி உயரம் கொண்ட இந்த சிற்பம் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் சிறிய முடியுடன் கூடிய கவசம், காதுகளில் பத்திர குண்டலமும், கழுத்தணிகளுடன் முகத்தில் முறுக்கு மீசையுடனும், கீழாடை அணிந்து, வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் கொண்டு நின்ற நிலையில் காணப்படுகிறது. ஆதித்த சோழனின் சிற்பம் தெருவோர சன்னதியில் வைத்து வழிபடுவது பொதுமக்களையும், தொல்லியல் நிபுணர்களையும் வேதனை அடைய செய்துள்ளது. எனவே வரலாற்று பாரம்பரியமிக்க ஆதித்த சோழனின் சிற்பத்தினை பிரத்தியேகமாக தனி அரங்கம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story