ஓராண்டாக அறிவிப்போடு நிற்கும் திட்டம்: ஏற்காட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஏற்காட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஏற்காடு சேலம் மாவட்ட மக்களின் சொர்க்கமாக கருதப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் என்றால் கூடுதல் செலவு ஆகும். ஆனால் குறைந்த செலவில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து சுற்றி பார்க்கலாம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
சேலத்தில் இருந்து ஏற்காடு மலைக்கு சென்றால், சுற்றுலா பயணிகளை வரவேற்பது படகு இல்லம் தான். மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம். இதுதவிர, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, பக்கோடா பாயிண்ட், அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது உண்டு. மேலும் பசுமையான மரங்கள், பரந்து விரிந்த காபி தோட்டங்களையும் காணலாம்.
சாகச சுற்றுலா தளம்
இங்கு ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெறும். இந்நிலையில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் வகையிலும், சுற்றுலா தளங்களை மேலும் மேம்படுத்தும் வகையிலும் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புலியூர் கிராமத்தில் சுமார் 4 ஏக்கரில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடந்த கோடை விழா- மலர்கண்காட்சி தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த மதிவேந்தன் அறிவித்தார். இது சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடவடிக்கை இல்லை
ஆனால் அமைச்சர் அறிவித்து தற்போது ஓராண்டு ஆகியும் இதுவரை சாகச சுற்றுலா தளம் அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஏற்காட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
ஏற்காட்டை சேர்ந்த ஜோதி:-
ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்று அழைப்பதுண்டு. காரணம் ஊட்டிக்கு சென்று வர செலவு அதிகமாகும். மேலும், தமிழகம்-கேரளா எல்லையில் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதை ஒப்பிடும் போது ஏற்காட்டுக்கு சென்று வர செலவு குறைவுதான். ஏற்காட்டில் ஏற்கனவே இடங்களை தவிர புதிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
கடந்த ஆண்டு ஏற்காட்டில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார். மேலும், படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். ஆனால் அந்த திட்டம் வெறும் அறிவிப்போடு தான் உள்ளது. இதுவரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, ஏற்காட்டில் கூடுதல் சுற்றுலா தளங்களை உருவாக்க வேண்டும்.
சுற்றுலாவை மேம்படுத்த...
ஏற்காட்டிற்கு வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் முத்து-நந்தினி:-
ஏற்காட்டிற்கு பலமுறை சுற்றுலா வந்துள்ளோம். ஆனால் ஏற்கனவே பார்த்த இடங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. புலியூரில் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை இதுவரை செயல்படுத்தவில்லை. அதேபோல், படகு இல்லத்தில் மிதக்கும் ஓட்டல் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. அந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. ஊட்டி, கொடைக்கானலை போன்று ஏற்காட்டிலும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
ஏற்காட்டை சேர்ந்த ஜெய் ஆனந்த்:-
ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். புலியூர் கிராமத்தில் சாகச சுற்றுலா தளத்தை உடனடியாக அமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொணடுவர வேண்டும். படகு இல்லத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட குயிக் பைட்ஸ் என்ற உணவகத்தை திறக்க வேண்டும். அதேபோல், ஏரியில் மிதக்கும் உணவும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் வெறு அறிவிப்பாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விரைவில் பணிகள்
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், புலியூரில் 5 முதல் 10 ஏக்கரில் சாகச சுற்றுலா தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு கயிறு ஏறுதல், டிராகன் போன்று உருவம் அமைத்தல், மங்கி ஜம்மிங் போன்ற பல்வேறு சாசக விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் அங்கேயே தங்கும் வகையில் கூடாரம் அமைக்கப்படும். இதுபோன்ற பல்வேறு சாகசங்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடலாம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.