அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருமா?
இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருமா என எதிர்பார்க்கின்றனர்.
இந்திய பொருளாதார வளர்ச்சி தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்ற நிலையில் தேசிய அளவில் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக அரசும் தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரூ.15,160 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனாலும் தென் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ள நிலையில் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் பட்டாசு, அச்சு, தொழில் நூற்பாலைகள் பெருமளவு உள்ளன. சிமெண்டு உற்பத்தி தொழில் விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரிலும், சிவகாசி அருகே ஆலங்குளத்திலும் நடந்து வருகிறது.
பொருளாதார மண்டலம்
கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் மத்தியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விருதுநகர்-சாத்தூர் இடையே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து இதற்காக 2,000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. விருதுநகர்-சாத்தூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நிலையில் அருகில் 100 கி.மீ. தூரத்தில் தூத்துக்குடி துறைமுகமும், 50 கி.மீ. தூரத்தில் மதுரை விமான நிலையம் உள்ள நிலையில் உட்கட்டமைப்பு கொண்ட இந்த இடம் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்க உகந்த இடம் என கருதப்பட்டது. பெரும் தொழில் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வந்த நிலையில் திடீரென திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
தொழில் பூங்கா
இதனை தொடர்ந்து மத்திய அரசு தொழில் முதலீட்டு மையம் இப்பகுதியில் தொடங்க முடிவு எடுத்து ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஒப்புதலை கேட்டது. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் வழங்காத நிலையில் திட்டமும் கைக்கூடவில்லை. மேலும் அருப்புக்கோட்டையில் கைத்தறி பெருந்திட்ட வளாகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா விருதுநகர்-சாத்தூர் இடையே 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்கான நிலம் கண்டறியப்பட்டது. இதற்கிடையில் நிலத்தின் விலை அதிகமாக இருப்பதாக கூறி அ.தி.மு.க. அரசு சிப்காட் தொழில் பூங்காவின் நிலப்பரப்பை 1,500 ஏக்கராக குறைத்தது.
ஜவுளி பூங்கா
கடந்த 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசின் தொழில் கொள்கைகள் மாற்றம் எனக்கூறி தனியார் பங்களிப்புடன் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக அரசு கடந்த ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் போது விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து விருதுநகர்-சாத்தூர் இடையே இ. குமாரலிங்கபுரத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டம்புதூரில் ரூ.2,400 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தது. இந்த ஜவுளி பூங்கா அமைக்க நிலம் கண்டறிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
செயல்பாடு இல்லை
கடந்த 8 ஆண்டுகளாக விருதுநகர்-சாத்தூர் இடையே பல தொழில் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் இதுவரை எந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வராத நிலை நீடிக்கிறது. இப்பகுதியில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்தபடி தொழில் பூங்கா அமைக்கப்பட்டால் தான் தொழில் மேம்பாட்டு அடையவும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அடையவும் வாய்ப்பு ஏற்படும்.
அத்துடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனாலும் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தொடர்ந்து நீடிப்பதால் தொழில்முனைவோரும் படித்த இளைஞர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வலியுறுத்தல்
எனவே தமிழக அரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழில்பூங்கா அல்லது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவை இப்பகுதியில் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொழில் பூங்கா தொடங்குவதில் வேறு ஏதும் சிரமம் இருக்க வாய்ப்பில்லை. எனவே மேலும் தாமதிக்காமல் இப்பகுதியில் தொழில் பூங்கா தொடங்கப்பட்டால் விருதுநகர் மாவட்டத்தில் பொருளாதார மேம்பாடு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கூறும் கருத்துகள் பற்றி இனி பார்ப்போம்.
ஆயத்த ஆடை
பிரசன்னா (தொழில் முனைவோர்):-
நான் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். தற்போதைய நிலையில் எனது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் சிறிய அளவில் இத்தொழில் செய்து வருகிறேன். அரசின் தொழில்பூங்கா தொடங்கப்பட்டால் தொழிலை விரிவுபடுத்தி செய்வதற்கும் அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு தருவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும் அரசு தொழில் பூங்கா அமைத்தால் என்னை போன்ற பெண் தொழில் முனைவோருக்கு அரசு சலுகைகள் எளிதில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் விருதுநகர் பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை கொடுக்க வாய்ப்பு ஏற்படும்.
நிதி ஒதுக்கீடு
மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்க செயலாளர் குருசாமி:-
மத்திய, மாநில அரசுகள் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகளையும,் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி வரும் நிலையில் இத்தொழில்கள் அனைத்தும் தலைநகரை சுற்றியே தொடங்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ள நிலையில் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் முன்னேறவிழையும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் தொழில் தொடங்கினால் தான் பொருளாதார மேம்பாடு அடையவும், மாவட்டம் முன்னேறவும் வாய்ப்பு ஏற்படும். அதிலும் பெருந்தொழில் தொடங்கினால் தான் அதனை சார்ந்து சிறு மற்றும் குறுந்தொழில்களும் தொடங்க வாய்ப்பு ஏற்படும்.
தற்போதைய நிலையில் விருதுநகர்- சாத்தூர் இடையே தொழில் மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்படும் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது. அறிவிப்புகளால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. செயல்பாட்டிற்கு வந்தால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
இளைஞர்களின் வாழ்வாதாரம்
கணினி அறிவியல் பட்டதாரி முத்துமணி:- கணினி அறிவியல் பட்டப்படிப்பு முடித்து ஓராண்டாகியும் நிரந்தர வேலை கிடைக்காத நிலையில் வேலை தேடி வருகிறேன். வெளியூர் சென்று வேலை பார்க்க வாய்ப்பில்லாத நிலையில் விருதுநகரில் வேலை கிடைத்தால் பெற்றோரையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள முடியும். விருதுநகரில் தொழில் பூங்கா தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதுடன் இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் தொழில் பூங்கா என்று அறிவிப்பு பலகை உள்ளது.
உடனடியாக தொடங்கினால் என்னை போன்ற படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்தால் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
துரித நடவடிக்கை
என்ஜினீயரிங் பட்டதாரி மகேஷ்:-
நான் சிவில் என்ஜினீயரிங் முடித்திருந்தாலும் ஐ.டி. துறையில் பணியாற்ற விரும்புகிறேன். சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு சென்று ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பும், விருப்பமும் இல்லாத நிலையில் விருதுநகர் பகுதியில் தொழில்கள் தொடங்கினால் இங்கேயே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து உள்ளேன், தமிழக அரசு விருதுநகர்-சாத்தூர் இடையே தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் இங்கு ஐ.டி. நிறுவனங்களும் வர வாய்ப்புள்ளதால் இங்கேயே பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். எனவே அரசின் துரித நடவடிக்கை தான் என்னை போன்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் பணிகள் தொடக்கம்
கலெக்டர் மேகநாதரெட்டி:-
விருதுநகர்-சாத்தூர் இடையே இ.குமாரலிங்காபுரத்தில் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்திற்கு தேவையான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணி மாவட்ட நிர்வாகத்தால் முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிப்காட் தொழில் பூங்கா அமைப்பு பணிகளை சிப்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த இடத்தில் சிப்காட் தொழில் பூங்கா திட்டப் பணிகள் தொடங்கப்படும்.