ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படுமா?


ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படுமா?
x

கூடலூர் அருகே உள்ள ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே உள்ள ஆரோட்டுப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆரோட்டுப்பாறை பள்ளி

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆரோட்டுப்பாறை, பாரதி நகர், மரப்பாலம், சுண்ணாம்பு பாலம் மற்றும் கிளன்வன்ஸ், எல்லமலை, பெரிய சோலை உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் படித்து முடிந்து, மேல்நிலை கல்விக்கு 5 கி.மீட்டர் தூரம் உள்ள கூடலூர் மற்றும் பார்வுட் பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இவர்கள் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டியது உள்ளதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

காட்டு யானைகள் அச்சுறுத்தல்

ஆனாலும் மாணவ-மாணவிகள் காட்டு யானைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வனப்பகுதி வழியாக பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரை காட்டுயானை மிதித்து கொன்றது.

இந்த சம்பவத்தாலும், காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த காரணத்தாலும் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் நடந்த பொதுத்தேர்வில் ஆரோட்டுப்பாறை பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொள்ள முடியாமல் போனது. மேலும் அடிக்கடி காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மனரீதியாக பாதிப்பு

காட்டு யானைகள் அச்சுறுத்தல், பஸ் வசதி இல்லாதது போன்ற உள்ளிட்ட காரணங்களால் மாணவ-மாணவிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆரோட்டுபாறை அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?

இது குறித்து ஓவேலி மக்கள் இயக்க செயலாளர் ரஞ்சித் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, மேல்நிலைக்கல்விக்காக பார்வுட் அல்லது கூடலூர் சென்று வரும் மாணவ-மாணவிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதி வழியாக சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இலவச பயணம் என்ற காரணத்திற்காக அரசு பஸ்களில் அவர்களை முறையாக அழைத்து செல்வதில்லை. மேலும் முறையாக பஸ் வசதிகள் இல்லை.

இதுதவிர காட்டு யானைகள் அச்சுறுத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆரோட்டுபாறை அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேணடும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story