அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வராண்டாவில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 234 மாணவர்கள், 256 மாணவிகள் என 490 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை 10 வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளியில் 20 பைசா வடிவிலான கட்டிடத்தில் 3 அறைகளும் மற்றொரு கட்டிடத்தில் 1 அறையும், மற்றொரு கட்டிடத்தில் 4 அறை என 8 வகுப்பறைகள் செயல்பட்டு வந்தது.
மேலும் தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை என 4 அறைகள் வராண்டாவில் செயல்பட்டு வந்தது. இருப்பினும் போதுமான இடவசதி இல்லாததால் படிக்க மாணவர்கள் வராண்டாவிலும் தரையிலும் அமரவைக்கப்பட்டுள்ளனர்.
வகுப்பறை கட்டிடங்கள் மூடல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையால் 3 வகுப்பறை கொண்ட 20 பைசா வடிவிலான கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் மழை பெய்யும்போது மழைநீர் கசிந்து அந்த கட்டிடத்தின் முகப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உடைந்து விழுந்தது. இதனால் தற்சமயம் அந்த 3 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அதன் அருகே இருந்த 1 வகுப்பறை கொண்ட மற்றொரு கட்டிடம் என 4 வகுப்பறை கட்டிடங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் அப்பள்ளியில் 6 வகுப்புகளில் அமர வேண்டிய மாணவர்கள் தற்போது வராண்டாவிலும் தரையிலும், மரத்தடியிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். 14 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இந்த பள்ளியில் தற்போது 10 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதுமட்டுமின்றி 490 மாணவ-மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் அதற்கான கழிப்பறை வசதிகள் இல்லை.
பள்ளியில் சரியான சுற்றுச்சுவர் வசதி, பள்ளி முடிந்தவுடன் மூடுவதற்கு கதவு வசதியில்லை. எனவே கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது
இதுகுறித்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "நாங்கள் எல்லாம் கூலி தொழிலாளர்கள். எங்களிடம் தனியார் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க போதிய வசதி இல்லை. ஆனால் எங்களை போல் இல்லாமல் எங்கள் பிள்ளைகளாவது படித்து பட்டதாரிகள் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதனால் தான் பிள்ளைகளை இங்கு படிக்க அனுப்புகிறோம். ஆனால் பள்ளி கட்டிடம் உள்ள நிலைமையை பார்த்தால் பிள்ளைகளை படிக்க அனுப்பவே பயமாக இருக்கிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த பள்ளி கட்டிடத்தை புனரமைத்து தர வேண்டும். எங்கள் பிள்ளைகள் நிம்மதியாக படிக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்" என்றனர்.
மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
இதுகுறித்து முன்னாள் மாணவர் எடிசன் கூறுகையில், அன்னவாசல் பகுதி கிட்டத்தட்ட பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர். அன்னவாசலை சுற்றி பல குக்கிராமங்களிலிருந்தும் பெரும்பாலான பிள்ளைகள் இங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் தான் ஆரம்ப கல்வி பயில வேண்டிய சூழல் உள்ளது. இப்படி பல நூறு மாணவர்களின் கல்வி ஆரம்பத்திற்கு அடிகோலும் அரசு பள்ளி கட்டிடம் போதுமான வசதிகள் இன்றி இருப்பது கவலை தருகிறது. பல மாணவர்கள் பள்ளி கட்டிடம் பரமாரிப்பின்றி இல்லாததால் மரத்தடியிலும், தடுப்பு சுவர் மீதும் மண் தரையிலும் அமர்ந்து கல்வி பயில்வது அச்சத்தை உருவாக்குகிறது. குழந்தைகள் பயிலும் இப்பள்ளியில் அடிப்படை வசதியான சுகாதாரம், குடிநீர், கழிவறை கூட போதுமானதாக இல்லை. பெரும்பாலான மாணவர்கள் இயற்கை உபாதைகளுக்கு கூட அருகில் உள்ள ஆலடியம்மன் குளத்து கரைக்கே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. வகுப்பறை பற்றாக்குறையும் உள்ளது. இப்படி பல வசதி குறைபாடுகளுடன் இருக்கும் இப்பள்ளியை அரசு கவனம் செலுத்தி முன்னேற்ற வழி வகை செய்ய வேண்டும். அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்றார்.