நெல்லை-தூத்துக்குடி, தென்காசி உள்பட 5 மாவட்டங்கள் பாசன வசதிபெறும்: பம்பையாறு, அச்சன்கோவில்- வைப்பாறு இணைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
நெல்லை-தூத்துக்குடி, தென்காசி உள்பட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறும் பம்பையாறு- அச்சன்கோவில்- வைப்பாறு இணைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நெல்லை-தூத்துக்குடி, தென்காசி உள்பட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறும் பம்பையாறு- அச்சன்கோவில்- வைப்பாறு இணைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நதிகளை இணைக்க திட்டம்
நாட்டில் ஒரு பகுதியில் வறட்சியும், மறுபுறம் வெள்ளத்தால் பேரழிவும் ஏற்படும்போதெல்லாம் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது. அதன்படி, கடந்த 1972-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைக்க திட்டமிட்டார். தொடர்ந்து 1977-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமைக்கப்பட்ட நீர்பாசன குழுவானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது.
இதில் கேரளாவில் உள்ள பம்பையாறு, அச்சன்கோவில் ஆறுகளுடன் தமிழகத்தின் வைப்பாற்றை இணைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து கேரளாவில் குறுகிய தூரத்திலேயே கடலில் சங்கமிக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆறுகளில் முதல்கட்டமாக பம்பையாறு, அச்சன்கோவில் ஆறுகளின் உபரிநீரை கிழக்கு பக்கமாக தமிழகத்தின் வறண்ட பகுதிக்கு திருப்புவதன் மூலம் நெடிய வறட்சி நீங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இரு மாநில அரசு அதிகாரிகளுக்கும் இடையே 20-க்கும் மேற்பட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
மலைக்குள் குகைப்பாதை
தொடர்ந்து 1998-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தலைமையில் இயங்கிய நதிநீர் இணைப்பு குழுவானது பம்பை- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு பற்றி ஆய்வு செய்தது. இதில் பம்பை ஆற்றின் புன்னமேடு என்ற இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்குள் குகைப்பாதை அமைத்து, அச்சன்கோவில் ஆற்றுடன் இணைப்பது, பின்னர் அச்சன்கோவிலில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு குகைப்பாதை அமைத்து மேற்கு தொடர்ச்சி மலையைக் கடந்து தமிழகத்தில் மேக்கரை அடவிநயினார் அணைக்கு தண்ணீரை கொண்டு வருவது, பின்னர் அங்கு மலையடிவாரத்தில் இருந்து 50.68 கிலோ மீட்டர் தூரத்துக்கு 14 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட கால்வாயை வெட்டி வைப்பாற்றுடன் இணைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பம்பை கல்லாறு புன்னமேடு என்ற இடத்திலும், அச்சன்கோவில் கல்லாறு சித்தார்மூழி என்ற இடத்திலும் தலா 160 மீட்டர் உயரத்தில் அணைகள் கட்டுவது என்றும், அச்சன்கோவில் அருகில் 35 மீட்டர் உயர புவியீர்ப்பு அணை கட்டுவது என்றும், புன்னமேடு- சித்தார்மூழி அணைகளுக்கும் இடையே 5 மீட்டர் விட்டத்தில் சுரங்கப்பாதை அமைத்து இணைப்பது என்றும், அங்கு நீர்மின் நிலையம் அமைப்பதன் மூலம் கேரள அரசு 500 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2¼ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்
பம்பையாறு- அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின் நிட்சேபநதி, உள்ளார் போன்ற ஆறுகளுடன் இணைத்து வைப்பாற்றில் சேர்ப்பதன் மூலம் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தேவர்குளம், திருவேங்கடம், கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ராஜபாளையம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் பாசன வசதி பெறும். இதன்மூலம் சுமார் 2¼ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பம்பையாறு, அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு திட்டத்தால் கேரளாவில் வறட்சி ஏற்படும் என்றும், மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி அம்மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது. ஆண்டுதோறும் மிகை மழைப்பொழிவை பெறும் கேரள மாநிலத்தில் இருந்து பல ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றாலும், குறைந்தளவு உபரிநீரைக்கூட தமிழகத்தின் வறண்ட பகுதிக்கு வழங்க அந்த மாநில அரசு முன்வராததால் பம்பையாறு- அச்சன்கோவில்- வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டம் இன்றும் தொடங்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாய நிலங்கள் வானம் பார்த்த கரிசல் பூமியாக வறட்சியில் வாடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.
கேரள மாநில அரசு மறுப்பு
கோவில்பட்டியைச் சேர்ந்த வக்கீல் ராதாகிருஷ்ணன்:-
இந்தியாவில் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். கங்கையை குமரி மாவட்ட நெய்யாற்றுடன் இணைக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலில் கலக்கும் அச்சன்கோவில், பம்பையாற்றை தமிழகத்துக்கு திருப்பி வைப்பாற்றுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 27-2-2012 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில், நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் இரு மாநில அரசுகளும் ஒத்துழைத்தால்தான் நதிகளை இணைக்க முடியும் என்று கூறும் கேரள அரசு பம்பையாறு- அச்சன்கோவில்- வைப்பாறு நதிகளை இணைக்க அனுமதிக்க மறுக்கிறது. எனவே அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி இணைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
20 சதவீத உபரிநீர்
வடகரையைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஜாகீர் உசேன்:-
இந்தியாவில் பொழியும் மழையால் ஆண்டுக்கு 69 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தாலும், 8,800 டி.எம்.சி. தண்ணீரையே பயன்படுத்துகிறோம். மீதி 60 ஆயிரத்து 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே நாடு முழுவதும் உள்ள அணைகளை தேசிய மயமாக்கி இணைப்பதின் மூலம் தண்ணீர் சேமிக்கப்படுவதுடன் வறண்ட பகுதிகளில் வறட்சி நீங்கும்.
கேரள மாநிலத்தில் ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடத்தில் உள்ள இறால் பண்ணைகள் பாதிக்கப்படும் என்பதற்காகத்தான் பொய்யான காரணங்களை கூறி பம்பையாறு- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனினும் அந்த ஆறுகளின் 20 சதவீத உபரிநீரை தமிழகத்துக்கு தருவதால் அம்மாநிலத்தில் எந்தவித பாதிப்பும், குறைவும் ஏற்படாது.
5 மாவட்டங்களில் பாசன வசதி
கருப்பாநதி பெருங்கால் பாசன புதுக்குளம் விவசாய சங்க தலைவர் ரவிச்சந்திரன்:-
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பெரும்பாலான ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்தோடி கடலில் சேருகிறது. ஒரு சில ஆறுகளே கிழக்கு நோக்கி பாய்ந்தோடி தமிழகத்துக்கு வருகிறது. நான் சிறுவனாக இருந்தபோது, மேற்கு தொடர்ச்சி மலையில் ஆறு உற்பத்தியாகும் ஊருணிக்கட்டு என்ற இடத்தில் தமிழகத்துக்கு வரும் நீர்வழித்தடத்தை ஆண்டுதோறும் சுத்தம் செய்வோம். இதன் மூலம் நமக்கு அதிகளவில் தண்ணீர் கிடைக்கப்பெற்றது. இதற்காக அங்குள்ள பழங்குடி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கி, அவர்களையும் பயன்படுத்தி வந்தோம்.
நாளடைவில் தமிழகத்துக்கு வரும் நீர்வழிப்பாதையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில், தண்ணீரிலும் அழுகாமல் நின்று வளரும் வகையில் நாவல், மருதம் போன்ற மரங்களை கேரள மாநில வனத்துறையினர் நட்டு வளர்த்தும் தண்ணீரை திசை திருப்புகின்றனர். எனவே தமிழக வனத்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் நீராதாரங்களை பேணி பாதுகாக்க வேண்டும். இதற்காக நீர்பாசன விவசாய சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பம்பையாறு- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பதின் மூலம் தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீர் தட்டுப்பாடும் தீரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.