புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தரைவிரிப்புகள் முழுமையாக விரிக்கப்படுமா?
ெவயில் சுட்டெரிப்பதால் ஓட்டமும், நடையுமாக செல்வதால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தரைவிரிப்புகள் முழுமையாக விரிக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெயில் சுட்டெரிப்பதால் ஓட்டமும், நடையுமாக செல்வதால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தரைவிரிப்புகள் முழுமையாக விரிக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாரியம்மன்கோவில்
தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
அபிஷேகத்திற்காக அம்மனின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கை, அம்மன் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஆகம விதிப்படி நாள்தோறும் 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பாலாலயம்
இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும்.
தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறவில்லை. வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் திறக்கப்படும் நடையானது இரவில் மட்டுமே அடைக்கப்படும் என்பதால் பக்தர்கள் எப்போதும் கோவிலுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.
தரைவிரிப்புகள்
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களும் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவில் வளாகத்தில் கொடிமரத்துக்கு இருபுறமும் இருந்த மண்டபங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதனால் திறந்தவெளியாக காணப்படுகிறது.
தற்போது அக்னி நட்சத்திர காலத்தில் கொளுத்துவதை போல் வெயிலில் சுட்டெரிதது வருகிறது. இதனால் கோவிலின் வெளிபிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கால்களில் சூடு அதிகமாக இருப்பதால் நடையும், ஓட்டமாக செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக பிரகாரத்தில் பாதிஅளவுக்கு தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. பாதிஅளவுக்கு தரைவிரிப்புகள் எதுவும் இல்லை. விரிக்கப்பட்டுள்ள தரைவிரிப்புகளும் பிய்ந்து காணப்படுகிறது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு
இதனால் அந்த தரைவிரிப்புகள் மக்களுக்கு பயன் இல்லாதநிலையில் தான் உள்ளது. இதன்காரணமாக மதியம் நேரத்தில் வரக்கூடிய பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி செல்ல நடக்க முடியாமல் ஓடி செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித சிரமுமம் இன்றி பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தரைவிரிப்புகளை பிரகாரம் முழுவதும் முழுமையாக விரிக்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.