சின்னப்பெருந்தோட்டம்-திருவெண்காடு சாலை சீரமைக்கப்படுமா?
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சின்னப்பெருந்தோட்டம்-திருவெண்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சின்னப்பெருந்தோட்டம்-திருவெண்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணைப்பு சாலை
திருவெண்காடு ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பெருந்தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தின் கீழ் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி தான் பெருந்தோட்டம், அகர பெருந்தோட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. திருவெண்காட்டில் இருந்து பெருந்தோட்டம் செல்ல தற்போது மங்கை மடம் வழியாக செல்ல வேண்டி உள்ளது. ஆனால் மேற்கண்ட சாலையில் வழியாக சென்றால் 2 கிலோமீட்டர் தூரம் மிச்சப்படுகிறது.
குண்டும், குழியுமான சாலை
தற்போது இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடையும் நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை கடந்து தான் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மேற்கண்ட கிராம மக்கள் நெய்தவாசல் சாலையில் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. அந்த சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை புதுப்பிக்க ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றனர்.