இடைத்தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்;கலெக்டர், பார்வையாளர்கள் அறிவுரை


இடைத்தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம்;கலெக்டர், பார்வையாளர்கள் அறிவுரை
x

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார்கள்.

ஈரோடு

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார்கள்.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், செலவின பார்வையாளர் கவுதம் குமார், காவல்துறை பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் பிரசார கூட்டங்களுக்கு அனுமதி பெறுதல், வாகனங்களில் கட்சி கொடிகள் கட்டுவதற்கான அனுமதி, சட்டம்-ஒழுங்கு, வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ளும் பிரசாரங்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசாரம் செய்வதற்கான நடைமுறைகள், தேர்தல் பிரசார விளம்பரங்களை ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கு உள்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விதிகள் குறித்து அதிகாரிகள் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்கள்.

அறிவுரை

மேலும், அதிகாரிகள் அறிவுரை வழங்கி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டு இருப்பதால், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களின் போது பிளாஸ்டிக் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் அமைதியாகவும், ஒழுங்காகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வேட்பாளர்கள் ஒப்புதல் பெற்ற முதன்மை முகவர் மற்றும் வாக்குப்பதிவு முகவர் ஆகியோருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வாக்குப்பதிவு நாளில் வேட்பாளர் மற்றும் முதன்மை முகவர் ஆகியோர் பயன்படுத்தும் வாகனத்துக்கு உரிய அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்காளர்களை தவிர உரிய அடையாள அட்டை (வாக்குச்சாவடி முகவர்) இல்லாமல் யாரும் வாக்குச்சாவடிகளுக்குள் நுழையக்கூடாது, .

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) குருநாதன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story