சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகள் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகள் சீரமைக்கப்படுமா?
x

சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகள் சீரமைக்கப்படுமா?

திருவாரூர்

லெட்சுமாங்குடி சாலையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள்-பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி சாலை திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், சென்னை போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. அதனால் லெட்சுமாங்குடி சாலையில் உள்ளூர்-வெளியூர் பயணிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்காக பஸ் நிறுத்தம் உள்ள சில இடங்களில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடைகளை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

லெட்சுமாங்குடி சாலையில் அடுத்தடுத்து உள்ள கீழபனங்காட்டாங்குடி பயணிகள் நிழற்குடை, பனங்காட்டாங்குடி பயணிகள் நிழற்குடை, பூதமங்கலம் பஸ் நிறுத்தம் பயணிகள் நிழற்குடை, வ.உ.சி.நகர் பயணிகள் நிழற்குடை, கோரையாறு பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் பயணிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகளை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிமெண்டு காரைகள் பெயர்ந்து

இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த செபஸ்டின்: லெட்சுமாங்குடி சாலை திருவாரூர், மன்னார்குடி போன்ற நகர பகுதிகளின் வழித்தடம் என்பதால் இந்த வழித்தடத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை பயணிகள், பள்ளி மாணவர்கள் பஸ் வரும் வரை காத்திருக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் கீழபனங்காட்டாங்குடி தொடங்கி கோரையாறு வரை அடுத்தடுத்து உள்ள பயணிகள் நிழற்குடைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதில் சில பயணிகள் நிழற்குடைகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கீரிட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு உள்ளது. மேலும் மேற்கூரை- தடுப்பு தூண்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள்- பள்ளி மாணவர்கள் அந்த பயணிகள் நிழற்குடைகளை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகளை சீரமைத்து தர வேண்டும் என்றார்.

இருக்கைகள் இல்லை

கூத்தாநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவர் சலாவுதீன்: கூத்தாநல்லூர், ெட்சுமாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவர்கள் திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் படித்து வருவதால், அவர்கள் பஸ் வரும் வரை காத்திருப்பதற்காக லெட்சுமாங்குடி சாலையில் அடுத்தடுத்து உள்ள பயணிகள் நிழற்குடைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கீழபனங்காட்டாங்குடியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து எலும்பு கூடு போல காணப்படுகிறது. அதேபோல பூதமங்கலம் பஸ் நிறுத்தம் பயணிகள் நிழற்குடை இருக்கைகள் இல்லாமல் அசுத்தமான நிலையில் உள்ளது. மேலும், வ.உ.சி. நகர், கோரையாறு பயணிகள் நிழற்குடைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால், பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சாலையோரத்திலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் நிற்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால், சேதமடைந்த பயணிகள் நிழற்குடைகளை சீரமைத்து தர வேண்டும். இல்ைலயெனில் சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக பயணிகள் நிழற்குடைகள் கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story