ஆபத்தான மின் கம்பங்கள் அகற்றப்படுமா?
கூடலூரில் அரசு பள்ளிக்கூடங்கள், விடுதிகளில் உள்ள ஆபத்தான மின் கம்பங்கள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் அரசு பள்ளிக்கூடங்கள், விடுதிகளில் உள்ள ஆபத்தான மின் கம்பங்கள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அகற்ற உத்தரவு
கூடலூர் தாலுகா புளியம்பாறை அரசு பள்ளிக்கூட கட்டிடத்தின் மீது தாழ்வாக மின் கம்பிகள் சென்றது. அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தது. ஆனால், உடனடியாக அகற்றப்படாத நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூட கட்டிடத்தின் மீது விழுந்த பந்தை எடுப்பதற்காக மாணவர் ஒருவர் ஏறினார்.
அப்போது தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அரசு பள்ளிக்கூடங்கள், விடுதிகள், ஆஸ்பத்திரிகள், கட்டிடங்கள் மற்றும் வளாகத்துக்குள் உள்ள மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் நட வேண்டும் என மின்சார வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து அரசு பள்ளிக்கூடங்கள், விடுதிகள், ஆஸ்பத்திரிகளில் வருவாய்த்துறை, மின்சார வாரியத்தினர் ஆய்வு நடத்தினர்.
உபகரணங்கள் இல்லாததால் தாமதம்
கூடலூர் பகுதியில் உள்ள கோழிப்பாலம், பார்வுட், புளியம்பாறை உள்பட பல இடங்களில் அரசு பள்ளிக்கூட வளாகங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மின்வாரிய துறையினர் அகற்றினர். ஆனால், கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன் அருகே உள்ள மாணவியர் விடுதி உள்பட பல இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பள்ளியில் ஆபத்தாக உள்ள மின் கம்பங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய துறையினரிடம் கேட்ட போது, போதிய உபகரணங்கள் இல்லாததால் அரசு பள்ளிக்கூடங்கள், விடுதிகளின் வளாகத்தில் உள்ள மின் கம்பங்கள், மின் கம்பிகளை அகற்றி, இடம் மாற்றம் செய்யும் பணி தாமதமாகி வருகிறது. உபகரணங்கள் வந்தவுடன் பணி விரைவாக மேற்கொள்ளப்படும் என்றனர்.