தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை பாதிக்குமா?


தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை பாதிக்குமா?
x

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தீபாவளி ஆகும். தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். அடுத்து இனிப்பு, புதிய ஆடை ஆகும்.

புதுக்கோட்டை

தீபாவளி பண்டிகை

பட்டாசு, இனிப்பு இல்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது. காலம், காலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையையொட்டி பட்டாசுகள் பல தரப்பட்ட மக்களாலும் வெடிக்கப்படுகிறது. முன்பு இருந்த பட்டாசு ரகங்களை விட தற்போது புது விதமான ரகங்கள், வித, விதமான வண்ணங்களிலும் பல்வேறு வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை வெடிப்பது உண்டு. இதில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் விழாக்கோலம் பூண்டது போல காணப்படும். இரவில் வாணவேடிக்கை போல தற்போது பல்வேறு ரக வெடிகளும் வந்து விட்டன.

பட்டாசு வெடிப்பதற்கான நேரம்

இந்த நிலையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையும் நேரம் அனுமதிக்கப்பட்டது. இந்த உத்தரவானது கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அதே 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனவே வருகிற 24-ந் தேதி பண்டிகை கொண்டாடப்படுகிற நிலையில் இந்த உத்தரவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

போலீசார் வழக்குப்பதிவு

கடந்த ஆண்டுகளில் இந்த உத்தரவு இருந்தாலும் இதனை பெரும்பாலானோர் கடைப்பிடித்ததாக தெரியவில்லை. மேலும் அவர்கள் விருப்பப்பட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்தனர். இரவு நேரங்களில் மட்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு பதிலாக வாணவேடிக்கை போன்ற பல வண்ணங்களில் வெடிக்கும் வெடிகளை வெடிக்க செய்தனர்.

நள்ளிரவிலும் பட்டாசு சத்தம் ஒலித்து கொண்டிருந்தது. இதற்கிடையில் தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர்த்து மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக சிலர் மீது தமிழகத்தில் ஆங்காங்கே போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் உண்டு.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

பட்டாசு வெடிக்காத கிராமங்கள்

சமூக ஆர்வலர் முத்துக்குமார்:- பட்டாசு வெடிப்பதினால் காற்று மாசுபடுதல், ஒலி மாசுபடுதல், நோயாளிகளின் மன பதற்றம் அதிகரிக்கும். பட்டாசு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய வேதி பொருட்கள், வெடித்து காற்றில் துகள்களாக கலந்து கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே அதிக வேதி பொருட்கள் கலந்த பட்டாசுகளை தவிர்க்க வேண்டும். வேதி பொருட்கள் குறைவாக கலந்த பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளில் 400-க்கும் மேற்பட்ட வகையானது உள்ளது.

ஆனால் அதில் 25 சதவீதத்திற்குள் பசுமை பட்டாசு வகை ஆகும். பசுமை பட்டாசுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வேதி பொருட்களின் விகிதம் குறைவாக உள்ளதால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறைவு. பசுமை பட்டாசுகள் என்பது காற்று மாசுபடுவதில் வீரியம் குறைவாகும். முற்றிலும் காற்று மாசுபடாமல் இருக்கும் என்பது கூறமுடியாது. எனவே பாதிப்பு மற்றும் மாசு அதிகம் ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். பட்டாசு வெடிக்காத கிராமங்களை பார்த்து நாமும் படிப்படியாக மாற வேண்டும்'' என்றார்.

பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

பொன்னமராவதி தாலுகா சடையம்பட்டியை சேர்ந்த யுவராஜ் கூறுகையில், பட்டாசு வெடிப்பது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினை என்றால் அதை தடை செய்வது பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். எனவே பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும். பட்டாசு தொழிலை நம்பி பல்வேறு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பட்டாசுகளினால் மட்டுமே காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது ஏற்புடையது அல்ல. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போலவே மற்ற தினங்களிலும் அனைத்து அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிகள் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றார்.

தற்போது உள்ள கட்டுப்பாடுகளே நல்லது

விராலிமலை தாலுகா, பேராம்பூரை சேர்ந்த முத்துக்குமார் கூறுகையில், தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு இவை மூன்றும் தான். அப்படி இருக்க பட்டாசுக்கு தடை விதித்து சிறியவர், பெரியவர் கனவை சிதைத்து விடலாகாது... மறந்து விடக்கூடாது நாள்தோறும் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசை விட அவற்றின் ஒழிப்பான் எழுப்பும் அதிக சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசை விட ஆண்டுக்கு ஒரு நாள் தீபாவளி பண்டிகை வருகிறது.

ஆனால் பட்டாசு உற்பத்தியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழியை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். பட்டாசு தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விடாமல் காப்பாற்றவும், மக்களிடையே நிலவும் பாரம்பரிய பழக்கத்தை மதிக்கும் வகையிலும் தற்போது உள்ள கட்டுப்பாடுகளின் படி தொடர்வதே நல்லது.

பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்

கறம்பக்குடியை சேர்ந்த பட்டாசு வியாபாரி ரெங்கையன் கூறுகையில், பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் என எங்கள் வாழ்வாதாரத்தின் பெரும் பகுதி தீபாவளி பண்டிகையை சார்ந்தே அமைந்து உள்ளது. ஒரு ஆண்டிற்கான எங்களின் எதிர்பார்ப்பு மற்றும் திட்டமிடலை தீபாவளியை ஒட்டிய 2 நாட்களே தீர்மானிக்கின்றன. ஆனால் பட்டாசு வெடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விற்பனையை வெகுவாக பாதிக்கிறது. ஏற்கனவே ஜி.எஸ்.டி.வரி விதிப்பு, மூல பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் பட்டாசுகளின் விலை உயர்ந்து விற்பனையும் சரிந்து வருகிறது. இவ்வேளையில் நேர கட்டுப்பாடு உள்ளிட்ட அரசின் கெடுபிடிகள் கொண்டாட்டத்தை குறைத்து பட்டாசு விற்பனையையும் வீழ்ச்சியடைய செய்யும். எனவே பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து நேர கட்டுப்பாடு இன்றி பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

வியாபாரம் பாதிக்க வாய்ப்பு

விராலிமலை பட்டாசு கடை உரிமையாளர் பிரகாஷ் கூறுகையில்:-ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்து காத்திருந்து அதிக முதலீடுகளை போட்டு கடை நடத்தி வருகிறோம். இந்த ஒரு நாள் வியாபாரம் எங்களுக்கு அதிக லாபம் ஈட்டக் கூடியதாக இருக்கும். கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை இந்த முறை அதிக அளவில் விற்பனைக்கு வைத்துள்ளோம். ஆனால் பட்டாசு வாங்க வரும் இளைஞர்கள் அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை அதிகம் விரும்பி கேட்கின்றனர். அவர்களுக்கு கொடுக்காத பட்சத்தில் எங்களது வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதே போல் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டால் பொதுமக்கள் வழக்கம்போல் செலவழிக்கும் தொகையை காட்டிலும் குறைந்த அளவே செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களது வியாபாரம் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.


Next Story