வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படுமா?


வேலூர் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படுமா?
x

வேலூர் லாங்குபஜாரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் லாங்குபஜாரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வணிக மையம்

வேலூர் மாநகராட்சி பகுதியின் முக்கிய வணிக மையமாக லாங்கு பஜார் திகழ்கிறது. இங்கு அரிசி, பருப்பு, வெல்லம், நவதானியங்கள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகைப்பொருட்களின் குடோன் மற்றும் கடைகள் அமைந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அரிசி, மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவை லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன.

இதையொட்டி நேதாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. வேலூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மளிகை, காய்கறி கடை வியாபாரிகள் காய்கறி, பூ, பழங்கள், அரிசி, மளிகைப்பொருட்களை மொத்தம் மற்றும் சில்லரை விலையில் வாங்குவதற்காக தினமும் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜாருக்கு வந்து செல்கின்றனர்.

அதேபோன்று பொதுமக்களும் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை இங்கு வந்து வாங்குகிறார்கள்.

வீட்டின் அருகே உள்ள மளிகை, காய்கறி விற்பனை கடைகளை விட விலை குறைவு, ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் பார்த்து தரமாக வாங்கலாம் என்பதால் பொதுமக்கள் லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட்டிக்கு அவ்வப்போது வருகை தருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இங்குள்ள குடோன், கடைகளுக்கு பொருட்களை எடுத்து வரும் கனரக வாகனங்கள், சிறுவியாபாரிகள், பொதுமக்களின் நடமாட்டம் என்று லாங்குபஜார் பகுதி அதிகாலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு லாங்குபஜார் வழியாக வேலூர் நகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் கடைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகள் படிப்படியாக சுருங்கின. சுமார் 60 அடி சாலையான லாங்குபஜார் தற்போது 40 அடிக்கும் குறைவான சாலையாக காணப்படுகிறது.

7 ஆண்டுகளுக்கு முன்பு லாங்குபஜாரின் ஒரு பகுதியில் தள்ளுவண்டிகள், தரைக்கடைகளும், மற்றொரு பகுதியில் இருசக்கர வாகனங்களும் என்று சுழற்சி முறையில் வைக்கப்பட்டன.

தாறுமாறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், சாலையோர தரைக்கடைகளால் லாங்குபஜாரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கும் நிலை காணப்பட்டது.

திறந்தவெளி மேடை கடைகள்

இதற்கு தீர்வு காணும் விதமாக கடந்த 2013-14-ம் ஆண்டில் சாலையோர வியாபாரிகளுக்காக ரூ.70 லட்சம் மதிப்பில் பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் 252 திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டன.

இதில், லாங்குபஜார் சாலையோர தரைக்கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தினசரி கடை வாடகையாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டது. கடையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. பொதுமக்களின் பார்வையில் படும்படியாக இல்லாமல் உள்பகுதியில் சில கடைகள் அமைந்துள்ளது.

லாங்குபஜாரை போன்று இங்கு வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்று கூறி பல வியாபாரிகள் மீண்டும் லாங்குபஜாருக்கு படையெடுத்தனர்.

அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்துறையினர், போலீசார் தங்களுக்கு பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் ஒதுக்கப்பட்ட திறந்தவெளி மேடை கடைக்கு செல்லும்படி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து அங்கு நிரந்தரமாக கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

பெயரளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம், காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

அதன்காரணமாக லாங்குபஜாரில் சாலையோர கடை ஆக்கிரமிப்பு, தள்ளுவண்டி, தரைக்கடைகள், இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் நிறுத்தம் உள்ளிட்டவற்றால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் கூட எளிதில் சென்றுவர முடியாத நிலை காணப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட நடைபாதையை கடைக்காரர்கள் பலர் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இடையே நடந்து செல்கிறார்கள்.

கலெக்டரின் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்தமாதம் லாங்குபஜாரில் ஆக்கிரமிப்பு கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

ஆனால் சில நாட்களில் அந்த கடைக்காரர்கள் மீண்டும் அதே இடத்தில் கடை வைத்தனர். லாங்குபஜாரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக நடைபெறாமல் பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது.

ஒருகாலத்தில் பஸ் போக்குவரத்து இருந்த சாலை தற்போது பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியாத நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

எனவே நடைபாதை, சாலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், தரைக்கடை வியாபாரிகளை மீண்டும் பழைய மீன்மார்க்கெட்டிற்கு மாற்றவும், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து லாங்குபஜார் கடை வியாபாரிகள், பொதுமக்கள், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினரின் கருத்துகளை பார்ப்போம்.

வாகனங்கள் பறிமுதல்

வேலூர் லாங்குபஜாரில் கடை நடத்தி வரும் சுந்தர்:- நான் 42 ஆண்டுகளாக இங்கு கடை நடத்தி வருகிறேன். லாங்குபஜார் சாலை தற்போது மிகவும் சிறியதாக மாறிவிட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையின் இருபுறமும் நடைபாதை போடப்பட்டது. ஒருபுறம் 10 அடி அகலத்துக்கு நடைபாதை என்று இருபுறமும் சுமார் 20 அடி அகலத்துக்கு நடைபாதையும், அதையொட்டி கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை சில வியாபாரிகள் முழுமையாக ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

அதனால் பொதுமக்கள் சாலையில்தான் நடந்து செல்கிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்துவார்கள்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையின் ஒருபுறத்தில் சாலையோர கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். மற்றொருபுறம் கடைகள், இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும். அதனை மீறி அங்கு வைக்கப்படும் கடைகள், நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் பொதுமக்கள் இடையூறு இன்றி இங்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்வார்கள் என்றார்.

மீண்டும் பழைய மீன்மார்க்கெட்...

லாங்குபஜார் அண்ணா சிறுபழ வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ஆபித் பாஷா:- பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் மிகவும் சிறிய, சிறிய அளவில் கடைகளை கட்டி விட்டனர்.

மீன்மார்க்கெட் வளாகத்தின் உள்பகுதியில் கடை ஒதுக்கப்பட்ட வியாபாரிகள் சிலர் சரியாக வியாபாரம் இல்லை. தினமும் மாநகராட்சிக்கு ரூ.100 செலுத்த வேண்டும் என்று மீண்டும் லாங்குபஜாருக்கு படையெடுத்தனர். அதனால் இங்கு கடை வைத்திருந்தவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் லாங்குபஜாரிலேயே பழங்களை வாங்கி சென்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அனைவரும் லாங்குபஜாரில் கடை வைத்துள்ளனர். தற்போது அனைத்து வியாபாரிகளும் பழைய மீன்மார்க்கெட் வளாகத்துக்கு செல்வதற்கு தயாராக உள்ளோம்.

ஆனால் அந்த பகுதியில் அண்ணாசாலையில் ஒருகிலோ மீட்டர் தூரத்துக்கு ஆட்டோக்கள், தள்ளுவண்டிகளில் வைத்து பழங்கள், காய்கறிகள் யாரும் விற்பனை செய்ய கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

அதனையும் மீறி விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள், ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.

சாலை தடுப்புச்சுவர்

சத்துவாச்சாரியை சேர்ந்த நந்தினி:- ஓட்டல் மற்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகைப்பொருட்களை வாங்குவதற்காக லாங்குபஜாருக்கு அடிக்கடி வரும் சூழ்நிலை காணப்படுகிறது.

லாங்குபஜார் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எளிதில் இங்கிருந்து வெளியே செல்ல முடியவில்லை. ஒரேநேரத்தில் சாலையின் எதிரெதிரே ஆட்டோ அல்லது கார்கள் வந்தால் வெகுநேரம் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரின் இருபுறமும், சாலையோரமும் இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுகிறது. சென்டர்மீடியனை அகற்றினால் சாலையோரம் மட்டுமே இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், தரையோர கடைகள் வைப்பார்கள்.

இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. அல்லது பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பழைய மீன்மார்க்கெட் வளாகத்தில் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜாருக்கு வரும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


Next Story