பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?


பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

சென்னையில் படிப்பு, வேலை, தொழில் நிமித்தமாக வசித்து வரும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு ரெயில்களில் முன்பதிவு 'டிக்கெட்டு' கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய டிக்கெட்டு முன்பதிவு ஒரு சில நிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக தென் மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் காலியாகி காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.

பயணிகள் ஏமாற்றம்

இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டு முன்பதிவு கடந்த 29-ந்தேதி தொடங்கியது.

ஆனால் முன்பதிவு தொடங்கிய வேகத்திலே சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டு கிடைக்காதவர்கள் சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனவே பொங்கல் பண்டிகைக்கால பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

தனியார் பஸ்

இதுகுறித்து பயணிகள் தெரிவித்த கருத்து வருமாறு:-

சிவகாசி தனசேகரன்:- செங்கோட்டையில் இருந்து சிவகாசி வழியாக சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு போதிய இருக்கைகள் கிடைப்பது இல்லை. வியாழன், சனி, ஞாயிறுகளில் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் இருந்து சிவகாசி வழியாக தாம்பரத்துக்கு ஒரு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. விருதுநகரில் இருந்து செங்கோட்டை செல்லும் இந்த வழித்தடத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மக்களின் வசதிக்காக மற்ற நாட்களில் இயக்காவிட்டாலும் விழாக்காலங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும். வருகிற 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சிவகாசி வழியாக இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் பல ஆயிரம் பேர் டிக்கெட் கிடைக்காமல் கூடுதல் செலவு செய்து தனியார் பஸ்களில் வர வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு 13,14 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், 15, 16, 17 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து சிவகாசி வழியாக சென்னைக்கும் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

முன்பதிவு முடிந்தது

வத்திராயிருப்பை சேர்ந்த அனுசுயா:- பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களுக்கு தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்ல ரெயில் பயணத்தை தான் விரும்புகிேறாம். ஆனால் தற்போது அறிவித்த சில நிமிடங்களில் ரெயிலில் முன்பதிவு முடிந்து விடுகிறது.

ஆதலால் ெரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எளிதாக சிரமமின்றி செல்லும் வகையில் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதாரம்

விருதுநகர் மாரியப்பன்:-

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் என்னை போன்றவர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் தான் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொருளாதார ரீதியாகவும், வயது முதிர்வின் காரணமாகவும் பஸ்களில் செல்ல முடியாத நிலையில் ெரயில் பயணத்தைத்தான் நம்பி உள்ளோம். ஆனால் ெரயில்வே நிர்வாகம் பொங்கலுக்கான சிறப்பு ெரயில்கள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து விட்ட நிலையில் கூடுதல் ெரயில்களை இயக்குவது பற்றி எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே ெரயில்வே நிர்வாகம் பொங்கல் பண்டிகைக்காக கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க முன் வர வேண்டும். அதிலும் செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ெரயில்களை இயக்க வேண்டும்.

முதியவர்கள்

காரியாபட்டியை சேர்ந்த பெருமாளக்காள்:-

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். அப்போது தான் சிரமமின்றி எளிதில் சென்று வர முடியும்.

அதேபோல சென்னை உள்பட முக்கிய பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் பொதுமக்களுக்கு ரெயில்கள் இயக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் ரெயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியவர்கள் ரெயிலில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story