அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுமா?
அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்படுமா?
போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் மையம் விரைவில் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆயக்கட்டு
மடத்துக்குளம் பகுதியில் அமராவதி அணையை அடிப்படையாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு 3 போகம் விளைந்த இந்த பகுதியில் தற்போது குறுவை, சம்பா ஆகிய 2 போகங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆடிப்பட்டம் எனப்படும் குறுவை சாகுபடியில் குறைந்த வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் 110 நாட்கள் வயதுடைய, ஏக்கருக்கு 3 டன் மகசூல் தரக்கூடிய உயர் விளைச்சல் ரகமான கோ 10 மற்றும் ஏஎஸ்டி 16 ரகங்கள் தற்போது அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. மடத்துக்குளம் வட்டாரத்தில் மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், கண்ணாடிப்புதூர், ருத்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 1800 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இவை பெரும்பாலும் அறுவடை பருவத்தை எட்டியுள்ள நிலையில் சோழமாதேவி பகுதியில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் அரசு நெல் கொள்முதல் மையம் திறப்பது குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
குறுவை சாகுபடி
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-
மடத்துக்குளம் வட்டாரத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான சம்பா பருவத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இதனைக் கருத்தில் கொண்டு கடந்த பருவத்தில் மடத்துக்குளம், சர்க்கார் கண்ணாடிப்புதூர், ருத்ராபாளையம், பாப்பான்குளம் ஆகிய 5 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் நடப்பு குறுவை பருவத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் குறைவாகவே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் சர்க்கார் கண்ணாடிப்புதூர் மற்றும் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகியவற்றில் நெல் கொள்முதல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுக்கு விவசாயிகள் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சோழமாதேவி பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக கடத்தூர், காரத்தொழுவு, குமரலிங்கம் என அறுவடை தீவிரமடையும்.எனவே வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் குறிப்பிட்ட இந்த 2 இடங்களிலும் செயல்படத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அரசின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்'என்று அவர் கூறினார்.நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலர்களங்களில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்து காத்திருக்கிறார்கள்.