திருமக்கோட்டை போலீஸ் சரகத்தில் கோவிந்தநத்தம் இணைக்கப்படுமா?
பல கிலோ மீட்டர் தூரம் வீண் அலைச்சலை தவிர்க்க திருமக்கோட்டை போலீஸ் சரகத்தில் கோவிந்தநத்தம் இணைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருமக்கோட்டை:
பல கிலோ மீட்டர் தூரம் வீண் அலைச்சலை தவிர்க்க திருமக்கோட்டை போலீஸ் சரகத்தில் கோவிந்தநத்தம் இணைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வல்லூர் ஊராட்சி
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர் ஊராட்சியில் வல்லூர், மான்கோட்டைநத்தம், சமுதாயம், கோவிந்தநத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன. திருமக்கோட்டை போலீஸ் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு வல்லூர், மான்கோட்டைநத்தம், சமுதாயம் ஆகிய கிராமங்கள் திருமக்கோட்டை போலீஸ் சரகத்தில் சேர்க்கப்பட்டன.
ஆனால் திருமக்கோட்டைக்கு மிக அருகில் உள்ள கோவிந்தநத்தம் கிராமம் மட்டும் பரவாக்கோட்டை போலீஸ் சரகத்தில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக கோவிந்தநத்தம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
பாஸ்போர்ட் பெறுவதற்கு சிரமம்
பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்கள் பெறுவதற்கும் சிரமம் ஏற்பட்டு வருவதாக அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அருகில் திருமக்கோட்டையில் போலீஸ் நிலையம் இருக்கும்போது கோவிந்தநத்தம் கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே கோவிந்தநத்தம் கிராமத்தை திருமக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வீண் அலைச்சல்
இதுகுறித்து சமுதாயம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் கூறியதாவது:-
வல்லூர் ஊராட்சி கோவிந்தநத்தம் கிராமம் தற்போது பரவாக்கோட்டை போலீஸ் சரகத்தில் உள்ளது. இதனால் நாங்கள் பாஸ்போர்ட், அரசு சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் அனைத்து கிராம நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி பெற பரவாக்கோட்டை செல்ல வேண்டி உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே எங்கள் கிராமத்தை அருகில் உள்ள திருமக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இணைக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லை
வல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுரேஷ்:- வல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்கள் திருமக்கோட்டை போலீஸ் சரகத்தில் உள்ள நிலையில் கோவிந்தநத்தம் மட்டும் பரவாக்கோட்டை போலீஸ் சரகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் மக்கள் நலன் கருதி திருமக்கோட்டை போலீஸ் நிலையத்துடன் கோவிந்தநத்தம் கிராமத்தை இணைக்க வேண்டும்.
போலீசார் வருவதில் சிக்கல்
வல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஞானப்பிரகாசம்:- கோவிந்தநத்தம் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் திருமக்கோட்டை போலீஸ் நிலையம் உள்ளது. 10 கிலோமீட்டர் தூரத்தில் பரவாக்கோட்டை உள்ளது. திடீரென அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக போலீசார் வருவதற்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 கிலோ மீட்டர் அலைச்சல்
கோவிந்தநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்:- கோவிந்தநத்தம் கிராமத்தில் இருந்து பரவாக்கோட்டைக்கு நேரடியாக பஸ் வசதி கூட இல்லை. மன்னார்குடி சென்று அங்கிருந்து பரவாக்கோட்டை செல்ல வேண்டி உள்ளது. இதனால் பஸ்களில் செல்வோருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் வரை அலைச்சல் ஏற்படுகிறது. எனவே 1 கிலோமீட்டரில் உள்ள திருமக்கோட்டை போலீஸ் நிலையத்துடன் கோவிந்தநத்தம் கிராமத்தை இணைக்க உரிய நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.