பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படுமா?
பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி மறைமுகமாவும், நேரடியாகவும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுக்க பல்வேறு துைறகளை சேர்ந்த அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு தற்போது தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல எண்ணற்ற பேர் காயம் அடைந்துள்ளனர். ஆதலால் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.