தேனி மீறுசமுத்திரம் கண்மாயை சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தேனி மக்களின் நீண்டகால கனவு திட்டமான மீறுசமுத்திரம் கண்மாயை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேனி மக்களின் நீண்டகால கனவு திட்டமான மீறுசமுத்திரம் கண்மாயை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மீறுசமுத்திரம் கண்மாய்
தேனி உழவர்சந்தை அருகில் மீறுசமுத்திரம் கண்மாய் அமைந்து உள்ளது. பெயரில் 'சமுத்திரம்' இருப்பதை வைத்தே அறிந்து கொள்ளலாம், இது கடல்போல் காட்சி அளிக்கும் கண்மாய் என்று. பெயருக்கு ஏற்றது போல், இது தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்று.
இந்த கண்மாயின் பரப்பளவு சுமார் 128 ஏக்கர். கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தேனி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தின் ஆதாரமாக இது திகழ்கிறது. குடியிருப்பு விரிவாக்கம், கண்மாய் தூர்வாரப்படாமல் மதகுகள் சேதம் அடைந்தது போன்ற காரணங்களால் விளை நிலங்கள் தரிசு நிலங்களாகவும், மேய்ச்சல் நிலங்களாகவும் மாறின.
இந்த கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கண்மாய் பரப்பளவு குறைந்துள்ளது. இந்த கண்மாயை தூர்வாரி, ஆழப்படுத்தி இங்கு சுற்றுலா படகுகள் இயக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது தேனி மக்களின் கனவு திட்டம் என்றும் சொல்லலாம்.
ரூ.4.55 கோடி நிதி
கடந்த காலங்களில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல், தேனி நாடாளுமன்ற தேர்தல் என எல்லா தேர்தல்களின் போதும், இந்த கண்மாயை சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்ற வாக்குறுதியை வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் மக்களுக்கு வழங்கி இருந்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகளை இதுவரை யாரும் முழுமையாக நிறைவேற்றவில்லை.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், சுற்றுலா தலமாக மாற்றப்படவில்லை. தேனி மாவட்ட மக்களின் கிடப்பில் போடப்பட்ட கனவு திட்டங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது.
மக்களின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து இந்த கண்மாயை தூர்வாரி சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்த ரூ.4 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்படும் என்று தேனியில் 2017-ம் ஆண்டு நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அரசு நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த பணி மக்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது.
சுற்றுலா மையம்
கண்மாயில் பல ஆண்டுகளாக படிந்துள்ள வண்டல் மண், சகதிகள், பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு மாறாக கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள், மறுகால் கட்டமைப்பு போன்றை புதிதாக கட்டப்பட்டன. அந்த பணியின் போது கண்மாயில் தண்ணீர் இருந்ததால், நிலத்தடி நீர் செறிவூட்ட புதிதாக ஒரு திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டது. கண்மாயை தூர்வாருவதற்கு பதில், கண்மாய்க்குள் 3 ராட்சத கிணறுகள் வெட்டப்பட்டன.
அந்த கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தால் எதிர்பார்த்த அளவுக்கு பயன் கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால், விவசாய நிலங்கள் தொடர்ந்து தரிசாகவே போடப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் எதிர்பார்த்த அளவுக்கு செறிவூட்டப்படவில்லை. கண்மாய் பகுதி மீண்டும் குப்பை தொட்டியாக மாறி வருகிறது.
இந்த கண்மாயில் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி கண்மாயை சுற்றிலும் நடைபயிற்சி தளம் அமைத்து, கண்மாய் நீரில் சுற்றுலா படகு இயக்கினால் சுற்றுலா பயணிகள் தேனீக்களாய் தேனியில் குவியும் வாய்ப்பு உள்ளது. கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வது போன்று இந்த கண்மாயையும் சர்வதேச தரத்திலான சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இங்கு உள்ளன. அவ்வாறு செயல்படுத்தினால் மாவட்டத்தின் சுற்றுலா மைய இடமாக தேனி மாறும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.