ஜான் சல்லிவன் நினைவு பூங்கா திறக்கப்படுமா?
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவன் நினைவு பூங்கா திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லிவன் நினைவு பூங்கா திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
முதல் கலெக்டர்
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக கடந்த 1815-ம் ஆண்டு முதல் 1830-ம் ஆண்டு வரை இருந்தவர் ஜான் சல்லிவன். இவர் கோவையில் கலெக்டராக பணியாற்றியபோது, அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக கோத்தகிரி திம்பட்டி பகுதிக்கு வந்தார். அப்போது அவருடன் வந்த பலர் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி பலியானார்கள். இருப்பினும் தனது முயற்சியை கைவிடாத ஜான் சல்லிவன், திம்பட்டியில் வசித்த தோடர் இன மக்களிடம் இருந்து கன்னேரிமுக்கு பகுதியில் நிலம் வாங்கி பங்களா கட்டினார்.
இது பெத்தக்கல் பங்களா என்று அழைக்கப்பட்டது. இதனை தங்கும் இடமாகவும், கலெக்டர் அலுவலகமாகவும் அவர் பயன்படுத்தி வந்தார். பின்னர் 1825-ம் ஆண்டில் ஊட்டி நகரை நிர்மாணித்து, அங்கு ஏரியையும் உருவாக்கினார். ஊட்டியில் 1841-ம் ஆண்டு வரை அவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான் சல்லிவன் கலெக்டர் அலுவலகமாக முதன் முதலில் பயன்படுத்திய கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள பங்களா, தற்போது அவரது நினைவகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
வெண்கல சிலை
இதனை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பழைய புகைப்படங்கள், ஆதிவாசி மக்களின் உணவு, உடை மற்றும் கலாசாரத்தை விளக்கும் புகைப்படங்கள், ஜான் சல்லிவன் வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் புகைப்படங்கள் போன்றவை காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் நீலகிரியின் பெருமைகளை விளக்கும் நூலகமும் செயல்பட்டு வருகிறது. நினைவகத்துக்கு வெளியே ஜான் சல்லிவனின் வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும் ஜான் சல்லிவன் பிறந்த நாளான ஜூன் 15-ந் தேதி, நினைவு தினமான ஜனவரி 16-ந் தேதிகளில் கலெக்டர் கோத்தகிரியில் உள்ள நினைவகத்திற்கு சென்று, அங்குள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நினைவு பூங்கா
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஜான் சல்லிவன் நினைவு சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான 4½ ஏக்கர் நிலத்தில் சூழல் பூங்கா அமைக்க ரூ.5 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, பூங்கா அமைக்க ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கொரோனா பேரிடர் காலத்தில் பணிகள் தாமதமாக நடந்து வந்ததால் பணிகள் முழுமை பெறாமல் இருந்தது.
இதனால், அவரது பிறந்த தினத்தில் பூங்கா திறப்பு விழா நடைபெறவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வைத்த கோரிக்கை காரணமாக பூங்கா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. கழிப்பறை, பூங்கா அலுவலகம், நுழைவுவாயில், நடைபாதை, செயற்கை நீருற்று அமைக்கப்பட்டு உள்ளது. நடைபாதையின் இருபுறமும் புல்வெளிகள் உள்ளன. இருப்பினும், பூங்கா வளாகத்தில் மலர் செடிகள் நடப்படவில்லை. வருகிற ஜனவரி மாதம் 16-ந் தேதி ஜான் சல்லிவன் நினைவு தினத்தன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு பூங்காவை திறக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொருளாதார முன்னேற்றம்
கோத்தகிரி ஜான் சல்லிவன் நினைவக நிர்வாகி கக்கி சண்முகம்:-
கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் ஜான் சல்லிவன் அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த நிலையில் இருந்தது. கிராம மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நினைவகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதே கிராமத்தில் ஜான் சல்லிவன் நினைவு பூங்கா அமைக்கப்பட்டது. பூங்கா வளாகத்தில் மாதிரி தேயிலை தொழிற்சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்தோம். தற்போது நினைவு பூங்காவில் பணிகள் நிறைவடைந்தும், திறப்பு விழா தாமதமாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் பூங்காவை இன்னும் தோட்டக்கலை துறையிடம் ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. எனவே, தோட்டக்கலை துறையிடம் பூங்காவை ஒப்படைத்து, விரைவில் திறக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
மேம்படுத்த வேண்டும்
கன்னேரிமுக்கு கிராமத்தை சேர்ந்த வேணுகோபால்:-
கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், அதை நம்பி உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, கோத்தகிரி பகுதியில் உள்ள அறியப்படாத சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். ஊட்டியை கட்டமைத்தவரும், உருவாக்கியவருமான ஜான் சல்லிவனை நினைவுகூறும் வகையில், 200-வது ஆண்டு விழா கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஜான் சல்லிவன் நினைவு பூங்காவை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதுடன், கோத்தகிரி பகுதியில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
கோத்தகிரி கேசவன்:-
கோத்தகிரி பகுதியை சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்தினால், இப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படும். கோத்தகிரி நேரு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருவதைப் போல, கோடை சீசனுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, கோம்ஸ் நீர்வீழ்ச்சி, ஜான் சல்லிவன் நினைவகம், மற்றும் பூங்கா, கோடநாடு காட்சி முனையை மேம்படுத்த வேண்டும்.
ஜான் சல்லிவன் நினைவு பூங்காவில் கோடை சீசனுக்குள் மலர் நாற்றுகளை நடவு செய்து சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பூங்காவை விரைந்து திறக்க வேண்டும்.