கறம்பக்குடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படுமா?


கறம்பக்குடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படுமா?
x

போதிய டாக்டர் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, ஊழியர்கள் பற்றாகுறை, கடும் இடநெருக்கடி போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் உள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்பில் பொதுமக்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி

அரசு மருத்துவமனை

கறம்பக்குடி தாலுகா தலைமை இடமாகும். இத்தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தபட்டது. இந்த மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது.

2 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்

ஆனால் தாலுகா மருத்துவமனைக்கான எந்த வசதிகளும் கறம்பக்குடி மருத்துவமனையில் இல்லை. 6 டாக்டர் பணியிடங்கள் உள்ள நிலையில் 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் அவ்வபோது விடுமுறை, மாற்று பணி என சென்று விடுகின்றனர். இரவு பணிக்கு டாக்டர்கள் இருப்பதில்லை. 5-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

மேலும் ஒரு தாலுகா மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இங்கு இல்லை. போதிய ஊழியர்கள் மற்றும் இடவசதி இல்லாததால் சில மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தபடாமலேயே உள்ளன. இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளது.

கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் சாலை விபத்துக்களுக்கு உள்ளாவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்த மருத்துவமனைக்கே கொண்டுவரப்படுகின்றனர். ஆனால் முதல் உதவி சிகிச்சை அளிக்க கூட டாக்டர்கள் இருப்பதில்லை. இதனால் பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் கடும் இடநெருக்கடியுடன் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

போதிய கட்டிட வசதி இல்லாததால் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பயன்படுத்தபடாமல் உள்ளது. தூய்மை பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனையில் சுகாதாரகேடு உள்ளது. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வாரம் ஒரு போராட்டம்

கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் அவலநிலையை கண்டித்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து கட்சிகள் சமூக அமைப்புகள் சார்பில் வாரம் ஒரு போராட்டம் என்ற வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

கூடுதல் துணை சுகாதார நிலையம் தேவை

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற வகையில் கறம்பக்குடிக்கு 4 சுகாதார மையம் தேவை. ஆனால் ஒரே மையம் மட்டுமே உள்ளது. இதனால் தாய் சேய் சிகிச்சைக்கு கர்ப்பத்தை பதிவு செய்வது தொடங்கி தடுப்பூசி, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் தாமதமாக நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.


Next Story