கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?


கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?
x

வடகாடு பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தென்னை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இப்பகுதிகளில் வீசிய கஜா புயலால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்பில் இருந்து இன்னமும் மீள முடியாமல் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

தற்போதும் புயலில் இழந்த மரங்களை ஈடு செய்ய தென்னை மரக்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்து வருகின்றனர். மேலும் தற்போது காய்ப்பு தன்மையை இழந்த தென்னை மரங்கள் கூட மெல்ல மெல்ல அதன் பாதிப்பில் இருந்து மீண்டு கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வருகிறது.

தேங்காய் விலை வீழ்ச்சி

இந்நிலையில், தேங்காய் விலை வீழ்ச்சி கண்டு தேங்காய் ஒன்று ரூ.7 முதல் ரூ.10 வரை விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர். மேலும் தென்னை விவசாயிகளால் ஏற்கனவே தேங்காய் விலை வீழ்ச்சியால் போராட்டங்கள் கூட ஆங்காங்கே நடத்தப்பட்டன. வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு குறு விவசாயிகள் தான் அதிக அளவில் உள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை

இப்பகுதிகளில் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால் தென்னை விவசாயிகள் கடைகளிலேயே அதுவும் குறைந்த விலைக்கே கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்யும் நிலைக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வடகாடு பகுதியில் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி இளையராஜா கூறுகையில்:- ஏற்கனவே தேங்காய் விலை வீழ்ச்சியால் வேதனைப்பட்டு வருவதாகவும், கொப்பரை தேங்காய்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டுமெனில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியதாக இருக்கிறது.

அதுவும் ஒரு குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியும். இப்பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

குறைந்த விலைக்கே விற்பனை

புள்ளான்விடுதியை சேர்ந்த விவசாயி சரத்குமார்:- சிறு, குறு விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் குறைந்த பட்சமாக 40 முதல் 50 கிலோ எடை வரை மட்டுமே இருக்கும். இவற்றை எத்தனை கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து சென்று விற்பனை செய்வது, இதற்காக ஆகும் செலவை குறைக்க வேறு வழியின்றி அருகாமையில் உள்ள கடைகளிலேயே குறைந்த அளவிலான விலைக்கு தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

வடகாடு பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைந்தால் தென்னை விவசாயிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்றார்.


Next Story