கிருஷ்ணகிரியில் ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பில் சின்ன ஏரி-சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள சின்ன ஏரி சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சின்ன ஏரி
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட லண்டன்பேட்டை பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஒரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் இந்த சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரக்கூடிய பிரதான கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதின் காரணமாக நீர்வரத்து இன்றி காணப்பட்டது.
இந்த நிலையில கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்கள்.
குப்பை கழிவுகள்
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கரையை சுற்றியும் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனால் அந்த பணிகள் நடைபெறாமல் உள்ளதால் தற்போது சின்ன ஏரியை சுற்றி கரைப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளும், மருத்துவக்கழிவுகளும் அங்கு கொட்டப்படுகின்றன. மேலும் ஏரி முழுவதும் உள்ள தண்ணீர் மிக வேகமாக குறையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஆகாயத்தாமரைகள்
மேலும் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்து காட்சி அளிக்கின்றன. இதனால் இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன.
ஒருபுறம் ஆகாயத்தாரைகள் ஆக்கிரமிப்பு மறுபுறம் ஏரியில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள் என்று சின்ன ஏரி குப்பை கூளங்களின் சேகரமாக மாறி உள்ளது. எனவே இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்றும், இந்த ஏரியின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அங்கு பூங்கா நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
தூர்வார வேண்டும்
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் வசித்து வரும் ஆசீப் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி சின்ன ஏரி நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து கிடக்கின்றன. மேலும் குப்பைகளும் அந்த பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்த ஏரியை தூர்வாரிட வேண்டும். மேலும் ஏரி அருகில் பூங்கா அமைத்து, நடைபயிற்சி செல்ல வசதிகள் செய்து தர வேண்டும். மேலும் ஏரியை சுற்றிலும் குப்பைகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீரை சேமிக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
பொழுதுபோக்கு அம்சம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த ரோஷன் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நகர மக்களுக்கு பொழுது போக்கு அம்சம் என்று எதுவும் இல்லை. இந்த ஏரியை தூர்வாரி அழகுப்படுத்தினால் நகர மக்கள் பயன் அடைவார்கள். விடுமுறை நாட்களில் இந்த பகுதியில் வந்து பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்து செல்வார்கள். முதலில் ஆகாயத்தாமரைகளை முழுவதுமாக அகற்றி, ஏரியின் நீர் ஆதாரத்தை பெருக்கிட வேண்டும். அதன் பிறகு பூங்கா அமைத்தல், நடைபாதை அமைத்தல் போன்ற கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.