முக்கிய நீராதாரங்களான ஏரிகள் சீரமைக்கப்படுமா?


முக்கிய நீராதாரங்களான ஏரிகள் சீரமைக்கப்படுமா?
x

முக்கிய நீராதாரங்களான ஏரிகள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர்

ஏரிகள்

பெரம்பலூர் மாவட்ட பகுதிகள் பெரும்பாலும் மானாவாரி நிலங்களை கொண்டுள்ள பகுதியாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். மாவட்டத்தின் பல ஊர்களிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு, கால்நடைகளுக்கு, குடிநீர், வேளாண்மை போன்றவற்றின் பயன்பாட்டிற்காக பல ஏரி, குளங்களை தொலைநோக்கு பார்வையுடன் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக வேளாண்மைக்கென மாவட்டத்தில் சிறு அளவிலான பாசன ஏரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 130-க்கும் மேற்பட்ட சிறுபாசன ஏரிகள் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் பெரும்பாலான ஏரிகள் போதிய பராமரிப்பின்றி கிடக்கின்றன. மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள சிறுபாசன ஏரியான பெரிய ஏரிக்கு அருகே உள்ள காடுகளில் இருந்தும், வெள்ளியாங்குளம் என்ற மற்றொரு ஏரியில் இருந்தும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியானது சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவதோடு சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான பாசன நிலங்களையும் கொண்டுள்ளது.

முறையாக சீரமைக்கப்படவில்லை

மூங்கில்பாடி - குன்னம் செல்லும் வழியில் வெள்ளியாங்குளம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே உள்ள காடுகளில் இருந்து மழைக்காலத்தில் சிறு சிறு வாய்க்கால்கள் மூலம் மழைநீர் வந்தடைகிறது. இந்த ஏரி நிரம்பிய பிறகு இங்கிருந்து வெளியேறும் நீரானது பாசன ஏரியான பெரிய ஏரிக்கு செல்கிறது. இந்த பெரிய ஏரி நிரம்பினால் அடுத்துள்ள ஊர் ஏரிக்குச் சென்று பிறகு மருதையாற்றின் கிளை ஓடைகளுள் ஒன்றான மூங்கில்பாடி ஓடையை அடைந்து அங்கிருந்து மருதையாற்றுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் பெரிய ஏரி பாசன பயன்பாட்டிற்கும், மற்ற 2 ஏரிகளும் நிலத்தடி நீர்மட்டம், கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு மூங்கில்பாடி பகுதியில் கூடுதல் மழைப்பொழிவின் காரணமாக, சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஏரிகளும் நிரம்பின. இதையடுத்து பெரிய ஏரியின் மூலம் ஆண்டின் இறுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் பயிரிட்டு சாகுபடி செய்தனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரிகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக பெரிய ஏரியின் மதகானது முறையாக இல்லாத காரணத்தினால் பாசனத்திற்கு தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் 12 அடி ஆழ நீருக்குள் மூழ்கி மதகை சிரமத்துடன் திறந்தும், மூடியும் வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் ஏரிகள் தூர்ந்து போனதால் ஆழம் இல்லாமல் உள்ளது. கூடுதலாகத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத சூழலும் உள்ளது. கரைகள், உள்பகுதிகள் என ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்களும் வளர்ந்து காணப்படுகின்றன. வெள்ளியாங்குளம் ஏரியின் மடைப் பகுதியானது 15 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தநிலையில், அது சீரமைக்கப்படாததால் ஏரியில் போதுமான அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. ஏரியும், நீர் வெளியேறும் பகுதியும் ஒரே மட்டமாக காணப்படுகிறது.

இது தொடர்பாக பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையாக மனுவும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு இதுவரை யாரும் செவி சாய்க்கவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் இந்த ஏரிகளை முறையாக ஆழப்படுத்தி, மதகு மற்றும் மடைப்பகுதிகளை சீரமைத்து, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகளின் கருத்துக்களை காண்போம்.


Next Story