முருக்கேரி ஏரி தூர்வாரப்படுமா?


முருக்கேரி ஏரி தூர்வாரப்படுமா?
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முருக்கேரி ஏரி தூர்வாரப்படுமா? என்று கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம்

பிரம்மதேசம் அருகே முருக்கேரி கிராமத்தில் 4½ ஏக்கரில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் 100 ஏக்கர் சாகுபடி செய்து வந்தனர். அதுமட்டுமின்றி அந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு இந்த ஏரி பயனுள்ளதாக இருந்தது. ஆண்டுகள் உருண்டோடியும், ஏரியை பராமரிக்கவில்லை.

நாளடைவில் இந்த ஏரியில் இருந்து லாரிகளில் மண் ஏற்றி கடத்தப்பட்டன. இதன் காரணமாக அந்த ஏரி தற்போது ஆங்காங்கே குட்டை, குட்டையாக மாறி உள்ளது. தூர்வாரப்படாததாலும் ஏரி முழுவதும் புதர் மண்டியும், முட்செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. ஏரியில் உள்ள மதகுகளும், கலிங்கல்லும் உடைந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை.

மழையையும், ஏரியையும் நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் பயிர் அறுவடைக்கு முந்தைய காலத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகிவிடுகின்றன. இதனால் ஆண்தோறும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியின் கரைகளும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.

தற்போது ஏரியை குப்பை கொட்டும் இடமாகவும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் மாற்றி வருகிறார்கள். எனவே இனியும் தாமதிக்காமல் ஏரியை தூர்வாரி பராமரிக்கவும், கரையை பலப்படுத்தவும், மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.


Next Story