நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரம் புதுப்பித்து தரப்படுமா?


நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரம் புதுப்பித்து தரப்படுமா?
x

நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரம் புதுப்பித்து தரப்படுமா?

திருவாரூர்

சிதிலமடைந்து காணப்படும் நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரத்தை புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திரங்கள்

தஞ்சை பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவுக்கு தென்னிந்தியாவிலேயே எந்த பகுதியிலும் சத்திரங்கள் இல்லை என்பது தஞ்சைக்கே உரிய தனி சிறப்புகளில் ஒன்றாகும்.

கி.பி.1743-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர்கள், ராமேசுவரம் செல்லும் பெருவழியில் யாத்ரீகர்கள் தங்குவதற்காக சத்திரங்களை நிறுவியுள்ளனர். இந்த சத்திரங்கள் மராட்டிய மன்னர்களின் பெயரில் அல்லது அவர்களின் தாய், மனைவி, சகோதரி, ஆசைநாயகிகளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. சில சத்திரங்கள் குல தெய்வத்தின் பெயரில் அமையப்பட்டுள்ளன. ராமேசுவரம் வரை யாத்திரை செல்லும் பொதுமக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்த சத்திரங்களில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் இரண்டு வேளை உணவு அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீர் பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

மாணவர் விடுதிகள் இடமாற்றம்

சத்திரங்கள் வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் தங்குவோருக்கு வசதியாக விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு சத்திரத்திலும் உணவு வழங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதி கிராமங்களில் சில சத்திரத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தன. அந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் விளையும் தானியங்களை கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டு வந்தது.

மராட்டிய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த சத்திரங்கள் தஞ்சை சத்திரம் நிர்வாகத்துக்குட்பட்ட பல கிராமங்களில் அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளன. இதற்கான குத்தகையை மட்டும் சத்திரங்களின் நிர்வாகம் வசூலித்து வருகிறது.

தஞ்சை, ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராஜாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கி பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், தற்போது மாணவர் விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

யமுனாம்பாள் அரண்மனை சத்திரம்

வடநாட்டிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே அன்ன சத்திரங்களை கட்டி, பக்தர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர் மராட்டிய மன்னர்கள். அவர்களின் சிறப்பான நிர்வாக முறைக்கு சாட்சிகளாக இன்றளவும் விளங்குபவை இந்த சத்திரங்கள் என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டியமன்னர் பிரதாபசிம்மரால் தனது ஆசைநாயகி யமுனாம்பாள் பெயரில் நீடாமங்கலம் அரண்மனை சத்திரம் கட்டப்பட்டது. யமுனாம்பாள் அந்த அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். பள்ளி மாணவிகளுக்கான விடுதியும் நடத்தப்பட்டு வந்துள்ளது.

புதுப்பித்து தர வேண்டும்

இந்த அரண்மனையில் தஞ்சை சென்றுவர சுரங்க பாதையும் இருந்துள்ளது. அரண்மனை கதவுகளின் ஒவியங்கள் தொல்பொருள் ஆய்வு துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது நீடாமங்கலம் அரண்மனை சத்திரம் சிதிலமடைந்து உள்ளது. எனவே மத்திய தொல்பொருள் ஆய்வு துறையினரும், தமிழக அரசும் சிதிலமடைந்து காணப்படும் நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனை சத்திரத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story