புதிய தொகுப்பு வீடுகள் கட்டப்படுமா?
எருமாடு அருகே குடிசைகளில் மழைநீர் ஒழுகுவதால், புதிய தொகுப்பு வீடுகள் கட்டப்படுமா? என ஆதிவாசி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பந்தலூர்,
எருமாடு அருகே குடிசைகளில் மழைநீர் ஒழுகுவதால், புதிய தொகுப்பு வீடுகள் கட்டப்படுமா? என ஆதிவாசி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேற்கூரை பழுது
பந்தலூர் தாலுகா எருமாடு அருகே புளிங்குன்னு கொடநிலம் ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு ஆதிவாசி மக்கள் 13-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒரு தொகுப்பு வீடு மட்டும் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடும் பழுதடைந்து காணப்படுகிறது.
அங்கு வசிக்கும் அனைத்து ஆதிவாசி மக்களும் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்களை அளித்தனர். ஆனால், இதுவரை புதிய தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் குடிசை வீடுகளில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். ஒரே குடிசையில் 2 அல்லது 3 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். குடிசைகளின் மேற்கூரை பழுதடைந்து உள்ளது.
தொகுப்பு வீடுகள்
தற்போது பெய்து வரும் மழை காரணமாக குடிசைகளுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் குடிசைக்குள் வசிக்கும் அவர்கள் நனைந்து வருகின்றனர். மேலும் சிலர் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரைகளை தார்பாய் கொண்டு மூடி உள்ளனர். பலத்த காற்றால் குடிசைகள் விழாமல் இருக்க, சுற்றிலும் பாக்கு மட்டைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்பகுதிக்கு செல்லும் நடைபாதை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் ஆதிவாசி மக்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, கொடநிலம் கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். அனைத்து குடிசை வீடுகளிலும் மழைநீர் வழிந்தோடுகிறது. மழை பெய்யும் சமயங்களில் நனைய வேண்டிய நிலை உள்ளது. பழுதடைந்த நடைபாதையில் வெளியே சென்ற வர முடியவில்லை. எனவே, புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கான்கிரீட் நடைபாதை அமைக்க வேண்டும் என்றனர்.