நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்துடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா?


நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளிக்கு  விளையாட்டு மைதானத்துடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா?
x

நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்துடன் வேறு இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

நாமக்கல்

நகரவை பள்ளி

நாமக்கல் நகரின் மைய பகுதியில் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் வேலை பார்த்து வருகின்றனர்.

நாமக்கல் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளை காட்டிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி நகராட்சி நிர்வாகத்தின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அளவில் ரேங்க் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆசிரிய, ஆசிரியைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதே மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. இங்கு தினசரி நல்ஒழுக்க பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளி மாணவர்கள் ஜூடோ, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்து உள்ளனர்.

விளையாட்டு மைதானம்

இப்பள்ளி மிகவும் குறுகலான இடத்தில் அமைந்து இருப்பதால், காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் வந்து செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

இப்பள்ளி மாணவர்களின் முக்கிய தேவையாக இருப்பது விளையாட்டு மைதானம். விளையாடுவதற்கு மைதானம் இல்லை என்பதால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு விளையாட்டு மைதானத்துடன் வேறு இடத்தில் இப்பள்ளிக்கு புதிய கட்டிடங்களை கட்டித்தர வேண்டும் என்பது இங்கு படித்து வரும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட பள்ளி மேலாண்மைக்குழு முதன்மை கருத்தாளர் டி.எம்.மோகன் கூறியதாவது:-

நாமக்கல் நகரவை கோட்டை உயர்நிலைப்பள்ளியில் 1,400-க்கும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இருந்தாலும், விளையாட்டு மைதானம் இல்லாதது ஒரு குறையாக இருந்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள், இருக்கிற கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் தேசிய அளவில் கூட வெற்றி பெற்று இருக்கிறார்கள். விளையாட்டு மைதானத்துடன் கூடிய கட்டிட வசதி கிடைத்தால், பல்வேறு போட்டிகளில் சாதனை படைப்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சைக்கிள் ஸ்டேண்ட்

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் கமால்பாட்ஷா கூறியதாவது:-

நகரவை பள்ளியில் மாணவ, மாணவிகள் சைக்கிள்களை நிறுத்த வகுப்பறை கட்டிடங்களுக்கு அடியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் ஜெட்டிக்குளத்தில் தண்ணீர் நிரம்பி விடுவதால், அதில் இருந்து வரும் ஊற்றுநீர் சுமார் 2 அடிக்கு இந்த பகுதியை நிரப்பி விடுகிறது. எனவே மாணவ, மாணவிகள் பாதுகாப்பாற்ற நிலையில் சாலை ஓரங்களில் சைக்கிள்களை நிறுத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளையாட்டு மைதானம், சைக்கிள் ஸ்டேண்ட் வசதியுடன் புதிய இடத்தில் கட்டிடம் கட்டி கொடுத்தால் இப்பள்ளி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

மேலும் இப்பள்ளி காலையில் தொடங்கும்போதும், மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும்போதும் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை அங்கு நிறுத்தி வாகனங்களை ஒழுங்குப்படுத்தினால், மாணவ, மாணவிகள் எளிதில் சென்று வர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story