போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
ஓவர்ச்சேரியில் இருந்து குலமாணிக்கம் செல்லும் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
ஓவர்ச்சேரியில் இருந்து குலமாணிக்கம் செல்லும் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குறுகலான சாலை
கூத்தாநல்லூர் அருகே, ஓவர்ச்சேரியில் இருந்து, குலமாணிக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலை குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது.
இந்த சாலையில் மினி பஸ் மற்றும் பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையை வடபாதிமங்கலம், குலமாணிக்கம், பள்ளிவர்த்தி, பூதமங்கலம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், அன்னுகுடி, பழையகாக்கையாடி, பண்டுதக்குடி, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கருவேல மரங்கள்
இந்த சாலையோரத்தின் 2 பக்கங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த கருவேல மரங்கள் சாலையையும் மறித்து, வாகனங்கள் செல்ல இடையூறாக வளர்ந்துள்ளன. பஸ்சில் இருக்கையில் அமர்ந்து வரும் பயணிகளின் முகத்தில் கருவேல மரங்களின் முட்கள் குத்தி காயம் ஏற்படுத்தி வருகிறது.
இந்த சாலையில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
அகற்ற வேண்டும்
இரவு நேரங்களில் இந்த சாலையில் சென்று வர கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.