இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படுமா? விவசாயிகள், பொதுமக்கள் கருத்து
இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படுமா? என விவசாயிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படுமா? என விவசாயிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இயற்கை விவசாயம்
இந்தியாவில் விவசாயத்தின் வரலாறு புதிய கற்காலத்திலிருந்து தொடங்கியுள்ளது. உலக அளவில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 2018-ன்படி, விவசாயம் 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதம் பங்களித்துள்ளது. 18-ம் நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்- பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. மலிவான விலையிலும், எளிதில் இடமாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள். செயற்கை விவசாயத்தில் செயற்கையாக உணவு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால் மனித சமுதாயத்தின் ஆரோக்கியம் கேள்விக்குறியதாகி உள்ளது. இயற்கை விவசாயத்தில் இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. செயற்கை விவசாயத்தில் இயற்கை வளம் மற்றும் உயிர் இனம் முழுமையாக அழிக்கப்படுகிறது. இயற்கை விவசாயம் என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறையாகும். இயற்கை முறையில் விவசாயம் செய்வது உடலுக்கு நன்மை பயக்கும். எனவே இயற்கை விசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மருத்துவ குணம்
கருப்பம்பட்டி விவசாயி மணிமுருகன்:- எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாய முறையில், பாரம்பரிய நெல் வகைகளான கருப்புகவுனி, தூயமல்லிசம்பா, தங்கச்சம்பா ஆகியவற்றை பயிரிட்டுள்ளேன். இயற்கை விவசாயத்தில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள், உபயோகப்படுத்தப்பட்ட காபி தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைக்கின்றது. இயற்கை விவசாயத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. விளைபொருட்களின் விலை சற்று கூடுதலாக இருப்பதால், அதனை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இயற்கை விவசாயத்தில் விளையும் பாரம்பரிய நெல்வகைகளின் மருத்துவ குணங்களை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இயற்கை விவசாய முறை வளர்ச்சி பெறும்.
சீரான பயிர் வளர்ச்சி
பி.மேட்டூரைச் சேர்ந்த சுந்தரராசு:- பாரம்பரிய நெல் வகைகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவைகளாகும். பாரம்பரிய நெல் வகைகள் அனைத்தும் இயற்கை விவசாய முறையில் செய்தால் தான் அவற்றின் முழு பலனும் கிடைக்கும். இயற்கை உரங்களால் விஷமில்லா பயிர்களும், விளை பொருட்களும் கிடைக்கின்றன. அவற்றை உண்பதால் ஆரோக்கியமான சந்ததி உருவாகிறது. இயற்கை உரங்களை விவசாயிகள் தாங்களே தயாரிப்பதால் உரச்செலவினம் குறைகிறது. சாகுபடி செலவு குறைகிறது. நிகர லாபம் அதிகமாகிறது. மண் வளம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு மேன்மையாகிறது. இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத்தினால் விளை நிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பெருகுகிறது. பயிர்கள் இயல்பாகவே பூச்சி, நோய் எதிர்ப்பு திறனை பெறுகின்றன. இதனால் ரசாயன பூச்சி மற்றும் நோய் மருந்துகளை தெளிப்பதை குறைக்கவும் படிப்படியாக விட்டு விடவும் செய்யலாம். மண்ணின் கட்டமைப்பு கடினமாகாததால் பயிர்கள், சத்துக்களை எளிதாக எடுத்து கொள்கின்றன. இதனால் சீரான பயிர் வளர்ச்சியும் தரமான விளைச்சலும் கிடைக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசு இல்லா குடிநீரைப் பெறவும் இயற்கை விவசாய முறை அவசியம் தேவை.
எதிர்ப்பு சக்தி
புடலாத்தியை சேர்ந்த குடும்பதலைவி மஞ்சுளாதேவிசிவக்குமார்:- உண்மையில் பாரம்பரிய நெல் வகைகள், இயற்கை விவசாயத்தில் பயிரிடப்படும்போது, நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கருப்பு கவுனி அரிசியானது மன்னர்கள் சாப்பிட்ட அரிசியாக தெரிய வருகிறது. இவ்வகை அரிசியானது, புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்தியையும், இன்சுலின் சுரக்கவும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்பு மண்டலத்தை வலுவாக்கவும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. பூங்கார் அரிசியானது சுகப்பிரசவத்திற்கும், தாய்ப்பால் ஊறவும் உகந்தது. இவ்வகை அரிசிகளை உணவாக எடுக்கும்போது உணவே மருந்தாக மாறுகிறது. எனவே வரும் சந்ததியினரின் நலனுக்காக, ஆரோக்கியமாக வாழ இயற்கை விவசாய முறை வளர்ச்சியடைய வேண்டும்.
போதிய விழிப்புணர்வு
பச்சமலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி:- எங்களது வாழ்க்கை முறையே இயற்கையைச் சார்ந்ததாகும். கால்நடை வளர்ப்பு குறைந்ததிலிருந்து, சாணம் தட்டுப்பாடு ஏற்பட்டது. எரு பயன்பாடில்லாததால் பச்சைமலை விவசாயத்தில், உர பயன்பாடும் நவீன விவசாயமும் வந்தது. எங்களது விவசாயத்தில் மரவள்ளிக்கிழங்கும், முந்திரியும் முக்கியத்துவம் வாய்ந்தன. மரவள்ளி கிழங்கை தாக்கும் சப்பாத்தி பூச்சியையும், முந்திரியில் வரும் கொடிப்பூச்சியை அழிக்கவும் இயற்கை முறை விவசாயத்தில் முடியாததால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி வருகிறோம். இயற்கை முறை விவசாயம் பற்றிய போதிய விழிப்புணர்வு மலைவாழ்மக்களுக்கு கிடைக்காதது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.