பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?


பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?
x

பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.

கரூர்

நவீன எரிவாயு மயானம்

தமிழ்நாடு புகழூர் காகித ஆலை பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்ககம் சார்பில் இடைவெளி நிரப்பும் திட்டம் 2011-2012-ம் நிதியாண்டில் பேச்சிப்பாறை சுடுகாட்டில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 262.50 சதுர மீட்டரில் நவீன எரிவாயு மின் மயானமும், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவரும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நவீன எரிவாயு மயானம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி புகழூர் மனிதநேய அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, வேட்டமங்கலம், கோப்புப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை, புன்னம், குப்பம், அத்திப்பாளையம், பரமத்தி, தென்னிலை, கொடுமுடி, வெங்கம்பூர், சிவகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து தகனம் செய்யப்பட்டு சாம்பலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

எந்திரங்கள் பழுது

இந்தநிலையில் நவீன எரிவாயு மயானத்தில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்தது. அதன் காரணமாக நவீன எரிவாயு மயானத்தில் இறந்தவர்களின் உடலை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நவீன எரிவாயு மயானம் பூட்டப்பட்டது.

இதனால் மேற்கண்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று தகனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக எரிவாயு மயானம் பூட்டப்பட்டு இருந்ததால் அங்குள்ள எந்திரங்கள் துருப்பிடித்து வீணாகியது. அதேபோல் எரிவாயு மயானத்திற்கு செல்லும் பாதையில் புல் பூடுகள் முளைத்து புதர்போல் காட்சியளிக்கிறது.

பூட்டியே கிடக்கும் அவலம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகழூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.28 லட்சம் செலவில் பழுதடைந்த எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை மாற்றி சீரமைத்தனர். ஆனால் சீரமைத்து சில மாதங்கள் ஆகியும் அந்த எரிவாயு மயானம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் எரிவாயு மயானம் சீரமைக்கப்பட்டும் இறந்தவர்களின் உடலை மின் மயானத்தில் எரிக்க முடியாத அவல நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மீண்டும் திறக்கப்படுமா?

கோம்புப்பாளையம் பகுதியை சேர்ந்த சித்தார்த்தன்:- பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்த எரிவாயு மயானத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டு அவர்களது சாம்பலை உறவினர்கள் பெற்று காரியம் செய்து வந்தனர். இந்தநிலையில் எந்திரம் பழுதானதால் கடந்த சில ஆண்டுகளாக நவீன எரிவாயு மையம் மூடப்பட்டது. அதன் பிறகு எந்திரங்கள் சீரமைக்கப்பட்டன. ஆனால் சீரமைக்கப்பட்டும் மயானம் திறக்கப்படவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு மயானம் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரம் வீணாகிறது

கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன்:- பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானம் கடந்த பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. எரிவாயு மயானத்தில் பழுதடைந்த பொருட்களை சீரமைத்தும் நவீன எரிவாயு மயானம் திறக்கப்படாததால் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களின் உடலை இந்தப் பகுதியில் தகனம் செய்ய முடியாமல் உள்ளது. இறந்தவர்களின் உடல்களை வெகு தூரம் கொண்டு சென்று நீண்ட நேரம் காத்திருந்து உடல்களை வரிசைப்படி தகனம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் கால நேரம் வீணாகிறது. உள்ளூர் பகுதியில் எரிவாயு மயானம் இருந்தும் தகனம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக எரிவாயு மயானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிக்க வேண்டும்

திருக்காடுதுறை பகுதியை சேர்ந்த வடிவேல்:- பேச்சிப்பாறை நவீன எரிவாயு மின் மயானம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. அவ்வப்போது இந்த எந்திரத்தை பழுது நீக்கி பராமரித்து இருந்தால் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்காது. எனவே இந்த மின்மயானத்தை மீண்டும் திறந்து சுற்றுவட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடலை மீண்டும் தகனம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

30 கிலோ மீட்டர் சுற்றி...

வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி:- வேட்டமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இறந்தவர்களின் உடலை நாங்கள் ஆம்புலன்ஸ் மூலம் பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானத்திற்கு கொண்டு சென்று எரித்து வந்தோம். ஆனால் எரிவாயு மயானம் திறக்கப்படாததால் இங்கிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரூர் பகுதிக்கும், பரமத்தி வேலூர் பகுதிக்கும் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று எரிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புகழூர் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு மயானத்தை மீண்டும் திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story