பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்படுமா?


பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்படுமா?
x

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்படுமா?

தஞ்சாவூர்

54 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்படுமா? என்று மாணவ, மாணவிகள் பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்(தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 54 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட பழமை வாய்ந்த கல்வி மாவட்டமாகும்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 56 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. 55 ஆயிரத்து 118 மாணவ-மாணவிகள் இந்த கல்வி மாவட்டத்தில் படித்து வருகிறார்கள். 2,207 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

தஞ்சை வருவாய் மாவட்டத்திலேயே பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகளை கொண்ட பெரிய கல்வி மாவட்டமாகும்.

தஞ்சை வருவாய் மாவட்டத்தில் உள்ள தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய கல்வி மாவட்டங்களில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மட்டுமே கடந்த ஆண்டு வரை 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் முதலிடத்தில் உள்ள கல்வி மாவட்டமாகும்.

ஏழை, எளிய மாணவர்கள்

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் முற்றிலும் விவசாயம் மற்றும் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளதால் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் பிள்ளைகள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள், மீனவ மக்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் இந்த பகுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி மாவட்ட கல்வி அலுவலரின் அதீத கண்காணிப்பில் இருந்த பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தஞ்சை கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

90 கிலோ மீட்டர் பயணிக்கும் நிலை

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்படுவதால் இந்த கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் ஏறக்குறைய 90 கிலோ மீட்டர் பயணித்து தஞ்சைக்கு அலைந்து திரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் அரசாணை(எண் 151/9.9.2022ல்) இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தற்போது இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்(ந.க.எண்: 49138/ஆ3/இ1/2022 நாள் 26.9.2022) இடம் பெறவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

எனவே மாணவ-மாணவிகளின் எதிர்கால நலன் கருதி பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்படுமா? என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story