குப்பை பிரச்சினைக்கு அபராத நடவடிக்கை கை கொடுக்குமா?


குப்பை பிரச்சினைக்கு அபராத நடவடிக்கை கை கொடுக்குமா?
x

வேலூர் மாநகராட்சியில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அபராதம் விதிப்பது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அபராதம் விதிப்பது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

குப்பை தொட்டி இல்லாத நகரம்

வேலூர் மாநகராட்சியில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் முக்கிய மாநகராட்சியாக வேலூர் மாநகராட்சி திகழ்ந்து வருகிறது. மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குப்பை தொட்டிகள் இல்லாத நகரமாக வேலூர் திகழ்கிறது. இதுதவிர பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் மாநகராட்சியில் குப்பை பிரச்சினை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளை முன்னோக்கி பார்க்கும்போது மாநகராட்சியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கு தான் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்தார்கள். ஓட்டல்கள், நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளும் அந்த தொட்டியினை ஆக்கிரமித்திருக்கும். இந்த குப்பைகள் லாரிகள் மூலம் தினமும் அகற்றப்படும். அவை சதுப்பேரி ஏரியின் அருகே உள்ளிட்ட இடங்களில் கொட்டப்பட்டு வந்தன.

150 டன் குப்பை

இதனால் சதுப்பேரி குப்பை கிடங்கில் குப்பைகள் நிறைந்து மலைபோல் காட்சி அளித்தது. இந்த குப்பைகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசியதாலும், நோய் பரவும் சூழல் ஏற்பட்டதாலும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கு குப்பை கொட்டுவதும் கைவிடப்பட்டது.

இதனிடையே மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே திடக்கழிவு மேலாண்மை மையம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீட்டுக்கே தூய்மை பணியாளர்கள் சென்று குப்பையை சேகரித்தனர். அதன்படி குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கும் முன்பு மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி ஒருநாளைக்கு சுமார் 150 டன் குப்பைகள் வருவதாகவும், ஒருவர் சுமார் 250 கிராம் குப்பைகளை போடுவதாகவும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளை தரம் பிரிக்க மாநகராட்சியில் 51 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகளில் பிளாஸ்டிக் குப்பை, பாட்டில்கள், டயர் போன்றவை பிரிக்கப்பட்டு சிமெண்டு தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்காக அனுப்பப்படுகிறது.

சுகாதார சீர்கேடு

இந்த திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டபோதிலும் சில பிரச்சினைகளும் தீர்க்கமுடியாத ஒன்றாகவே உள்ளது. வீடுகளுக்கு குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை யாரும் சரிவர கொடுப்பதில்லை. குப்பைகளை சாலையின் ஓரம் ஆங்காங்கே கொட்டுவதும், கொட்டப்பட்ட குப்பைகளை தீ வைத்து எரிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோதிலும் மாநகராட்சி தோல்வியை கண்டது.

சாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் நகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மாநகராட்சியை வறுத்தெடுத்தனர். பலர் மாநகராட்சியை குற்றம்சாட்டி தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மாநகராட்சி குறித்து விமர்சனமும் செய்தனர்.

அபராதம்

எனவே மாநகராட்சியில் தற்போது அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். அதன்படி வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டுவோருக்கு ரூ.500 என்று அபராதம் விதிக்கப்படுகிறது. அதேநேரம், குப்பைகளை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என்றும் மேயர் சுஜாதா அறிவித்தார்.

இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளான நேற்று மாநகராட்சி பகுதியில் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்காணிக்க அந்தந்த மண்டல அலுவலத்தை சேர்ந்த சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

பிரித்து தரவேண்டும்

வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அதிகாலையிலேயே எங்கள் பணியை தொடங்குகிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று குப்பைகளை பெறுவோம். பலர் குப்பைகளை முறையாக பிரித்து தருவார்கள். ஆனால் பல வீடுகளில் குப்பைகளை மொத்தமாக போடுவார்கள். அதை பிரிப்பதில் எங்களுக்கு சிரமமாக இருக்கும். சில நேரங்களில் ஓரிரு நாட்கள் சேர்த்து வைத்த குப்பைகளை தருவார்கள். அப்போது துர்நாற்றம் வீசும்.

திடக்கழிவு மையங்களில் குப்பைகளை பிரிக்கும் போது அதில், உடைந்த பாட்டில்கள் உள்ளிட்ட காயங்களை ஏற்படுத்தும் பொருட்களும் அதில் இருக்கும். அதையும் நாங்கள் கவனமாக பிரிப்போம். எனினும் கைகளில் காயங்கள் ஏற்படும். அதை பொருட்படுத்தாமல் எங்களது பணியை மேற்கொள்கிறோம்.

அபராத நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இனி பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் வீச மாட்டார்கள் என நினைக்கிறோம். எங்களிடம் குப்பைகளை வழங்கும் போது முறையாக பிரித்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கண்காணிக்க வேண்டும்

காட்பாடி காந்திநகரை சேர்ந்த ஜெ.சரளா:-

குப்பைகளை எல்லா நேரமும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க முடியாத நிலை உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும்போது குப்பைகளை வீட்டில் வைத்திருக்க முடியாது. எனவே அதை வெளியே எங்காவது போட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வீடுகளுக்கும் காலையில் மட்டும் குப்பை சேகரிக்க வருகின்றனர். சில நேரங்களில் வருவது கிடையாது. சைதாப்பேட்டை போன்ற குறுகிய சாலைகள் கொண்ட வணிக பகுதிகள் நகரில் ஏராளமாக உள்ளது. பல கடைக்காரர்கள் இரவு நேரங்களில் கால்வாய்களில் தான் குப்பைகளை கொட்டுகின்றனர். சாலையோரமும் போட்டுவிட்டுச் செல்கின்றனர். கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் பல கடைக்காரர்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். சிறு வியாபாரிகளையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரை சேர்ந்த சுரேந்திரன்:-

குப்பை கொட்டுவதை தடுக்க கொண்டுவரப்பட்ட அபராத திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். இதுதவிர அபராத நடவடிக்கை வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்கக்கூடாது. இந்த திட்டத்தை தினமும் கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டப்படும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடியோ எடுத்து கொடுத்தால் அன்பளிப்பு என்கிறார்கள். இதனால் குப்பை கொட்டுபவருக்கும், வீடியோ எடுப்பருக்கும் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கை கொடுக்குமா?

வேலூர் மாநகராட்சியில் குப்பை பிரச்சினை அனைத்து வார்டுகளிலும் உள்ளது. அதை களைய மேற்கொள்ளப்பட்ட இந்த அபராத நடைமுறை மாநகராட்சிக்கு கை கொடுக்குமா?, கைவிடுமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேவேளையில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தால் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் எல்லை என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.

இலவசமாக உரம்

திடக்கழிவு மேலாண்மை மையங்களில் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது. இந்த உரங்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு இல்லை. விவசாயிகள் விலை கொடுத்து இதை வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. எனவே உரங்களை வெளியேற்றும் வகையில் தற்போது மாநகராட்சி சார்பில் இந்த உரங்கள் இலவசமாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story