பொன்னேரி, கீழணை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?


பொன்னேரி, கீழணை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?
x

பொன்னேரி, கீழணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அரியலூர்

முதலாம் ராஜேந்திர சோழன்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு தான் சோழ மன்னன் ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது தான் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில். முதலாம் ராஜேந்திர சோழன் கி.பி.1012-1044 ஆட்சி செய்தபோது கட்டப்பட்ட கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் இங்கு உள்ளது.

இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்கள் கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப்பெரிய சிவலிங்கம் இங்கு தான் உள்ளது.

பொன்னேரி

ராஜேந்திரன் சோழனின் ஆட்சி காலத்தில் உலகத்திலேயே நாவாய் படை வைத்திருந்த ராஜேந்திர சோழனின் புகழை பரப்பும் வகையில் ராஜேந்திர சோழன் உருவாக்கிய 700 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சோழகங்கம் என்கிற பொன்னேரியில், நீர்ப்பிடிப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் விவசாய பாசனத்திற்காக வெட்டப்பட்ட ஏரியாகும். தான் வெற்றி பெற்ற தன் நினைவாக கங்கையில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றி வெட்டப்பட்ட ஏரியாகும்.

பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உள்கோட்டை, இடைக்கட்டு மற்றும் ஆயுதகளம் கிராமங்களில் உள்ள சுமார் 4,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட பெரிய ஏரியாகும். மேலும் இந்த ஏரியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கி வைத்து சுற்றுலா தலமாக அமைத்து போட், படகு போன்ற தளமாகவும் அமைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பயன்படும் வகையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்றும், மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அணைக்கரை

அரியலூர் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொறியாளர் சர்ஆர்தர்காட்டண்

என்பவரால் கி.பி.1836-ம் ஆண்டு அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் அணைக்கரையில் கொள்ளிட ஆற்றின் குறுக்கே அணைக்கரை கீழணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் அரியலூர், கடலூர், தஞ்சை, நாகை, ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில் கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையை கட்டுவதற்கு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த சுற்று சுவர்களில் இருந்த கருங்கற்களை எடுத்து சென்று அணைக்கரை கீழணையை கட்டியுள்ளார்.

அதன்படி இந்த அணையில் இருந்து வடவாறு-வீராணம் ஏரி, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சங்கொல்லை வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால்கள் மூலம் 1,26,839 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணைக்கரையை 2-ஆக பிரித்து வடக்கு பிரிவு, தெற்கு பிரிவு என கொள்ளிட ஆற்றை இரு தீவுபோல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீட்டர் தூரத்தில் கொடிப்பள்ளம் என்ற இடத்தில் சங்கமித்து, இரண்டும் 33 மைல் சென்று சிதம்பரம் பிச்சாவரம் வழியாக வங்கக்கடலில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழணையில் படகு சவாரி செய்ய ஏற்ற இடமாக உள்ளதால், இந்த கீழணை பகுதியை சுற்றுலா தளமாக கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கை

இந்த பகுதி அதிகமான விவசாய நிலங்கள் சார்ந்த பகுதியாகும். இங்கு நெல், கடலை மற்றும் எள் போன்ற பயிர்கள் தான் அதிகமாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை குறைந்ததால் இந்த பகுதியில் ஒரு போகம் நெல் சாகுபடி மட்டுமே செய்ய முடிகிறது. இதனால் இந்த பகுதியில் முந்திரி பயிர், சவுக்கு மற்றும் தைலமரங்கள் நடவு செய்யப்படுகிறது. இந்த பகுதியில் முந்திரி பருப்பு உடைக்கும் தொழிற்சாலை ஒன்றும், அதிக அளவில் சவுக்கு மற்றும் தைலமரங்கள் பயிர் செய்யப்படுவதால் இங்கு ஒரு பேப்பர் மில் வரவேண்டும் என்றும், படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளதால், வேலைவாய்ப்பு அதிக அளவில் உருவாக்கி தரவேண்டும் என்பதே இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாகும்.


Next Story