சிவகாசி, திருத்தங்கலில் ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படுமா?


சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தொழில் நகரம்

தொழில்நகரமான சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் என பல ஆயிரம் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள வர்த்தகர்களும் சிவகாசிக்கு தொழில் தொடர்பாக வந்து செல்கிறார்கள். இந்த நகரின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

விருதுநகரில் இருந்து சிவகாசி நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் திருத்தங்கல் வழியாகத்தான் வர வேண்டும். அதேபோல் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டும் என்றால் சாட்சியாபுரத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த 2 பகுதிகளும் கடந்த 5 வருடங்களில் பல மடங்கு விரிவடைந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்

சிவகாசியில் இருந்து தொழில் மற்றும் கல்விக்காக தினமும் ஆயிரக்கணக்கான பேர் வாகனங்களில் திருத்தங்கலை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தநிலையில் சிவகாசியில் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக சாட்சியாபுரத்தை கடந்து சிவகாசிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த 2 சாலைகளிலும் ரெயில்வே கிராசிங் உள்ளது.

ரெயில்கள் வந்து செல்லும் போது இந்த இரண்டு பகுதியில் உள்ள ரெயில்வே கேட் கண்டிப்பாக அடைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டிய வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சரியாக குறைந்தது 30 நிமிடம் ஆகிறது.

ஆரம்ப கட்டத்தில் கைவிடப்பட்டது

இதனை தவிர்க்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ஆகிய 2 பகுதிகளிலும் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய எம்.பி. மாணிக்கம் தாகூர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆரம்ப கட்டத்திலேயே கைவிடப்பட்டது.

மீண்டும் தொடக்கம்

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி சூடு பிடிக்க தொடங்கியது. அதற்கான வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் செய்ய அதிகாரிகள் ஆர்வத்துடன் முன்வந்தனர். அப்போது சிலர் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

பின்னர் அந்த வழக்கு 1 ஆண்டு நீடித்தது. தற்போது சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிய பின்னர் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலமாக இந்த 2 பகுதியிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து வரும் நிலையில் இது கனவாக போய்விடுமோ என்ற அச்சம் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் நிச்சயம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் என்றும், ஒரு தரப்பினர் மேம்பாலம் அமைக்க வாய்ப்பு இல்லை. சுரங்கபாதை அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும்பணி

இதுகுறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறுகையில்:-

சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் நிச்சயம் ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்கான நிலம் கையகப்படுத்தும்பணி நடந்த போது சிலர் நீதிமன்றம் சென்று தடை கோரியதால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி காலதாமதம் ஆனது. தற்போது பாலம் அமைக்க தேவையான வாய்ப்புகள் அமைந்துள்ளது. இன்னும் ஒரு வருடத்தில் அதற்கான பணிகள் நிச்சயம் தொடங்கப்படும். குறித்த காலத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.


Next Story