ஆக்கிரமிப்புகளால் 5 அடியாக சுருங்கியது: பெயரோ ராஜவாய்க்கால்... ஓடுவதோ சாக்கடைநீர்! அரசு நடவடிக்கை எடுக்குமா?


ஆக்கிரமிப்புகளால் 5 அடியாக சுருங்கியது:  பெயரோ ராஜவாய்க்கால்... ஓடுவதோ சாக்கடைநீர்!  அரசு நடவடிக்கை எடுக்குமா?
x

பெயரோ ராஜவாய்க்கால், ஓடுவதோ சாக்கடை நீர். ஆக்கிரமிப்புகளால் 100 அடி அகலத்தில் இருந்து 5 அடி அகலமானது. ராஜவாய்க்கால் புதுப்பொலிவு பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சேலம்

சேலம்,

ராஜவாய்க்கால்

ராஜ வாய்க்கால்... பெயரில் மட்டும் இந்த வாய்க்கால் ராஜா அல்ல... பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த வாய்க்கால் 100 அடி அகலத்தில் பரந்து விரிந்து காணப்பட்டது. சேலம் மாநகரை கடந்து செல்லும் இந்த வாய்க்காலில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்லும் அழகு காட்சி, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்கின்றனர் வயது மூப்பர்கள்.

ஆனால் இன்றோ, ராஜ வாய்க்காலில் நிலையை பார்த்தால் நம்முடைய கண்களில் கண்ணீர்தான் வருகிறது. அந்த அளவுக்கு வாய்க்கால் ஆக்கிரமிப்புகளாலும், சாக்கடை கழிவுகளாலும் நிரம்பி கிடக்கிறது. பெயரோ ராஜவாய்க்கால்... ஓடுவதோ சாக்கடை நீர் என்று வேதனையுடன் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கொட்டநத்தம் ஏரியில் கலக்கிறது

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்குகிறது. இந்த ஆறு, சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை வழியாக நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையாற்றில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. திருமணிமுத்தாறு, சேலம் செவ்வாய்பேட்டை அனைமேடு பகுதியில் ராஜவாய்க்காலாக பிரிகிறது. அந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் நெத்திமேடு, கரியபெருமாள் கரடு வழியாக ஜாரிகொண்டலாம்பட்டியை கடந்து கொட்டநத்தம் ஏரியில் கலக்கிறது.

ராஜவாய்க்கால் தண்ணீர் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 100 அடி அகலம் கொண்டதால் இந்த வாய்க்கால் ராஜ வாய்க்கால் என்று அழைக்கப்பட்டதாக சொல்கின்றனர். காலப்போக்கில் ஆக்கிரமிப்பால் ராஜ வாய்க்கால் அகலம் 5 அடியாக சுருக்கப்பட்டு விட்டது. மேலும் ராஜவாய்க்கால் தொடக்க பகுதியில் இருந்து முடியும் வரை பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை கூழங்கள், கொட்டப்பட்டு சாக்கடை கால்வாய் போன்று காட்சி அளிக்கிறது. தூர்வாரப்படாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

துர்நாற்றம் வீசுகிறது

இந்த ராஜவாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ராஜ வாய்க்கால் பகுதியில்பூ கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள மைதிலி கூறியதாவது:- ராஜ வாய்க்கால் முழுவதும் செடி, கொடிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கிடப்பதால் ஜாரி கொண்டலாம்பட்டி, ரங்காபுரம், உடையன்காடு, பி.நாட்டாமங்கலம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் ராஜவாய்க்காலில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகும் நிலை எற்பட்டு உள்ளது. எனவே ராஜவாய்க்காலை தூர்வார வாய்க்கால் ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story