குளங்களில் மண் எடுக்க விதிமுறைகள் தளர்த்தப்படுமா? மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
மண்பாண்டம் தயாரிக்க குளங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி பெறுவதில் தொழிலாளர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போளூர்
மண்பாண்டம் தயாரிக்க குளங்களில் மண் எடுப்பதற்கு அனுமதி பெறுவதில் தொழிலாளர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்பாண்டங்கள்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைகளில், மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்காக போளூரில் கலை நயத்துடன் மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
போளூர் நகரில் உற்பத்தி செய்யப்படுகின்ற மண் பாண்டங்கள் சுற்று வட்டார கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
போளூரில் சில குடும்பத்தினர் தலைமுறை- தலைமுறையாக செய்து வருகின்றனர். சிறிய பானை முதல் பெரிய பானை வரை பல்வேறு வடிவங்களில் தயார் செய்து வருகின்றனர்.
பொங்கல் இடுவதற்கு தேவையான மண்ணால் ஆன அடுப்புகளும், பானை மூடிகளும் கூட கலை அம்சத்துடன் வடிவமைத்து வருகின்றனர்.
மண்பாண்டங்கள் தயாரிப்பதற்காக குளங்களில் இருந்து மண்ணை சேகரித்து வருகின்றனர். அந்த மண்ணை நன்றாக காய வைத்து பின்னர் தண்ணீரில் கலந்து பக்குவமாக பல்வேறு வடிவங்களில் பானை, அடுப்புகள் செய்து வெயிலில் சில மணி நேரம் காயவைத்து, அதன் பின் அவைகளை நன்றாக சுட வைக்கின்றனர்.
சிக்கல்கள்
மண்ணால் ஆன தட்டு, விளக்கு, தண்ணீர் பாட்டில், கப், பூந்தொட்டி, ஜாடி உள்ளிட்ட வீட்டு உபயோக மண்பாண்டங்களை நவீன முறையில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து தயார் செய்து வருகின்றனர்.
மண்பாண்ட பொருட்கள் தயார் செய்வதற்கு பல்வேறு சிக்கல்களை இவர்கள் சந்திக்கின்றனர். மண்எடுப்பதற்கு அனுமதி வாங்குவதற்கே சிரமங்கள் உள்ளது. அதனையும் சமாளித்து தயாரித்தால் போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் நிலை உயர்வடையாமலேயே உள்ளது.
ஆரோக்கியமாக வாழலாம்
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்களிடம் கருத்து கேட்டபோது கூறியதாவது:-
முதியவர் அர்ஜுனன்: முன் காலத்தில் சமையல் செய்யவும், உணவு அருந்தவும், மண் பாண்ட பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். இதனால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். தற்காலத்தில் மாற்று உலோக பாத்திரங்கள் செம்பு, எவர்சில்வர் போன்ற பாத்திரங்களை தேடி சென்றதால் தான் புதிய -புதிய நோய்கள் தாக்குகின்றன. உடல் ஆரோக்கியமும் குறைந்து வருகிறது. மண்பாண்ட பொருள்களை பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நோய்கள் அனுகாது.
சண்முகம்: குளங்களில் மண் எடுக்க அரசு நிபந்தனைகளை விதித்துள்ளதால் அதற்குரிய ஆவணங்களை செலுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இதனை அரசு தளர்த்த வேண்டும்.
திருநாவுக்கரசு: சுமார் ஆறு மாதங்களுக்கு முன் நாங்கள் ஒன்று கூடி கலெக்டரிடம் குளங்களில் மண் எடுக்க உரிய வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மண் கிடைக்காமல், பானை உற்பத்தி செய்வதற்கு தடை ஏற்படுகிறது.
வசந்தம் வீசும்
அரசு மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண்ணை குளங்களில் இருந்து இலவசமாக நிபந்தனை ஏதுமின்றி அனுமதி வழங்க வேண்டும். தயாரிக்கும் மண்பாண்டங்களை அரசே கொள்முதல் செய்து, விற்பனை செய்தால் எங்களின் வாழ்வாதாரம் மேம்படும். பொங்கலுக்கு அரசு ரேஷனில் கொள்முதல் செய்து அனைவருக்கும் மண்பானைகளை வழங்க வேண்டும். அரசு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில்கூட மண்பாண்டங்களிலேயே சமையல் செய்து வழங்க உத்தரவிட வேண்டும். இதுபோன்று செய்தால்தான் எங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படும். எங்கள் தொழிலுக்கும் உரிய மரியாதை கிடைக்கும். பாரம்பரியமும் காக்கப்படும்.
எனவே இந்த கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.