பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் சீரமைக்கும் பணி விரைவு பெறுமா?


பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் சீரமைக்கும் பணி விரைவு பெறுமா?
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த பள்ளிக்கூட கட்டிடங்கள் சீரமைக்கும் பணி விரைவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தூத்துக்குடி

பள்ளிக்கூட கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுவதால் மண்டபங்களிலும், மரத்தடியிலும் அமர்ந்து மாணவர்கள் படித்து வரும் நிலையில், அந்த கட்டிடங்களை சீரமைக்கும் பணிகள் விரைவு பெறுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

3 மாணவர்கள் பலி

நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். மேலும் சில மாணவர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 9,573 பள்ளிகளில் உள்ள 13,036 கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் உத்தரவு. அப்படி இடிக்கப்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயில மாற்று இடங்களையும் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

அதன்படி, நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் விஷ்ணு உத்தரவின்படி பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய 18 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பொறியாளர்கள் இடம் பெற்றனர்.

90 பள்ளி கட்டிடங்கள் பழுது

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,535 பள்ளிகளிலும் கட்டிடங்கள் ஆய்வு செய்யும் பணி தொடங்கி நடந்தது. இந்த ஆய்வின்போது, 90 பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இருப்பதும், 112 பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மாநகராட்சி நிதியில் இருந்தும், பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடங்களுக்கு யூனியன் நிதியில் இருந்தும், அரசு பள்ளிக்கூடங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு பொது நிதியில் இருந்தும் கட்டிடங்கள் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்

அதன்படி, பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்களில் படித்த மாணவர்களுக்கு தற்போது பெரும்பாலும் திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் ஆகியவற்றில் வைத்து பாடம் கற்பிக்கப்படுகிறது. சில பள்ளிக்கூடங்களில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கும் அவல நிலை உள்ளது.

இந்த நிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும். பழுதடைந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்படும். அந்த இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

அதே வேளையில், புதிய கட்டிட கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், அதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வண்ணை கணேசன் கூறும்போது, 'அரசு பள்ளிகளில் தற்போது கட்டிட வசதி சரியாக இல்லை. ஆனால் ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துகிறார்கள். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பழைய மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாடகை கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. இதேபோல் புதிய நடுநிலைப்பள்ளியில் கட்டிட வசதிகள் இல்லை. அந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து உள்ளனர். ஆனால், புதிதாக கட்டும் பணி மந்தமாக நடக்கிறது. அந்த பணியை விரைவுபடுத்த வேண்டும்' என்றார்.

ஆசிரியர்கள் கூறுகையில், 'அரசு பள்ளிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு பள்ளியில் பணியாற்றும் நாங்கள் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி தரத்தை உயர்த்தி வருகிறோம். ஆனால், போதிய கட்டிட வசதி இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே, அரசு கூடுதலாக கட்டிடங்களை கட்டித்தர வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தில் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மேலும், மாணவர்களை படிப்பில் ஊக்கப்படுத்துவதற்கு பரிசு பொருட்கள் வழங்குகிறோம்' என்றனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 140 பள்ளி கட்டிடங்கள் கடந்த ஆண்டு பழுதடைந்து இருந்தன. அவற்றில் 69 கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டன. மீதமுள்ள 71 கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கு எத்தனை கட்டிடங்களில் பணி மேற்கொள்ள வேண்டும்? என்று மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தென்காசியை சேர்ந்த செல்வமணி கூறும்போது, 'அரசு பள்ளி கட்டிடங்கள் குறித்த நிலையை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து புதிய கட்டிடங்களை கட்டிக்கொடுக்க வேண்டும். கட்டுமான பணிகள் ஓரளவுக்கு நடைபெற்றாலும் வேகமாக இந்த பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேலும் பள்ளிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக உள்ளதா? என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட கட்டிடங்களின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல்வேறு பள்ளிகளில் கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருப்பதும், சில கட்டிடங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த கட்டிடங்களை அகற்றுதல், பராமரிப்பு மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் போன்று சில கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அமர்ந்து படிப்பதற்கு கட்டிட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இடிக்கப்படாமலேயே உள்ளது. அந்த கட்டிடத்தின் அருகே மாணவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு மட்டும் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பல பள்ளி கட்டிடங்கள் பாழடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் நிற்கின்றன. பருவ மழைக்கு முன்பாக ஆபத்தான கட்டிடங்களை அகற்ற அரசு முன்வருமா என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடவடிக்கை

இதுகுறித்து முப்பிலிவெட்டியை சேர்ந்த சித்ராதேவி கூறும்போது, 'ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வக கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே, மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வேறு கட்டிடத்தில் ஆய்வக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள இந்த கட்டிடத்தின் வழியாகத்தான் மற்ற வகுப்பறைகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இதேபோன்று வகுப்பறை கட்டிடமும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே உள்ள வகுப்பறைகளில் மாணவ-மாணவிகளை அமர வைத்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இதனால் வகுப்பறைகளில் நெருக்கடி அதிகரித்து உள்ளது. மரத்தடியிலும் வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆகையால் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story