மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.
இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.
ஓடி ஒளிந்தார்கள்
* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.
அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.
* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.
* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.
* மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாய் இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப் படுவார்கள்.
* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.
இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தி இருந்தால் பிச்சைக்காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
காசு பார்க்கும் கயவர்கள்
'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. நாளடைவில் அது முடங்கிப் போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.
குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர். அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திரைப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
போலீஸ் நடவடிக்கை
தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களைக் குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.
இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.
பிச்சைக்காரர்கள் மீட்பு
பால்பாண்டி (ஆதரவற்ற முதியோர் காப்பக நிர்வாகி, அரப்படித்தேவன்பட்டி) :- தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து பிச்சைக்காரர்கள் மீட்பு இயக்கம் என்ற ஒரு தன்னார்வ இயக்கத்தை தொடங்கினோம். மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் மாவட்டம் முழுவதும் ஆதரவின்றி பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 196 பேர் மீட்கப்பட்டனர்.
அவர்களில் 106 பேர் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களை கண்டறிந்து ஒப்படைக்கப்பட்டனர். சுருளிப்பட்டி, வீரபாண்டியில் பிச்சை எடுத்த சாதுக்கள் 24 பேர் திருவண்ணாமலையில் உள்ள மடத்தில் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 66 பேர் மாவட்டத்தில் உள்ள 5 முதியோர் காப்பகங்களில் சேர்த்து பராமரிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வயது முதுமை, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர். அதன்பிறகு மாவட்டத்தில் பிச்சைக்காரர்கள் மீட்பு இயக்கம், மறுவாழ்வு இயக்க செயல்பாடுகள் முழுவீச்சில் நடக்கவில்லை. தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்றவர்கள் மட்டும் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர். மீண்டும் பழைய முயற்சி போல் பிச்சைக்காரர்களை மீட்க மாவட்ட நிர்வாகமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நிம்மதியான வாழ்க்கை
வசந்தம்மாள் (ஆதரவற்ற நிலையில் காப்பகத்தில் வசிப்பவர்) :- எனது சொந்த ஊர் சென்னை. எனது ஒரே மகள் சின்னமனூரில் கணவருடன் வசித்து வந்தார். நானும் அவர்களுடன் வசித்து வந்த நிலையில், எனது மகள், மருமகன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர். இதனால், ஆதரவற்ற நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தயவில் வாழ்ந்து வந்தேன். பின்னர் கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன். கடந்த ஒரு ஆண்டாக அரப்படித்தேவன்பட்டியில் உள்ள காப்பகத்தில் வசித்து வருகிறேன்.
சின்னமனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எனக்கு கணக்கு உள்ளது. அதில் லட்சக்கணக்கில் பணம் வைப்பு தொகையாக வைத்து இருந்தேன். வங்கி லாக்கரில் எனது நகைகளை வைத்து இருந்தேன். ஆனால் எனது ஆவணங்கள், லாக்கர் சாவி அனைத்தும் தொலைந்து போனதால் எனது நகை, பணத்தை பெற முடியாமல் இப்போது காப்பகத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன்.
செல்லத்துரை (மாற்றுத்திறனாளி, தாழையூத்து):- சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாமல், ஆதரவற்ற நிலையில் தாழையூத்து கிராம சாவடியில் தங்கி இருந்தேன். பிறரிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு என்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். சாப்பாட்டுக்கு கூட வழியின்றி பிறரிடம் கையேந்திய நான் தற்போது காப்பகத்தில் நிம்மதியாக வாழ்கிறேன். உடல் நலம் பாதித்தால் கூட உடனுக்குடன் சிகிச்சை கிடைக்கிறது.
இலவச தொலைபேசி எண்
பிரேம்குமார் (ஆதரவற்றோர் மறுவாழ்வு பணிக்கான மாவட்ட கள பொறுப்பு அலுவலர், தேனி) :- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தாலோ, பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தாலோ அவர்கள் மீட்கப்பட்டு சமூக நலத்துறை மூலம் காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றனர். 14567 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு இதுதொடர்பாக தகவல்கள் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கும் போது அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் மனு ரசீது பெற்று, காப்பகத்தில் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 50 பேரை மீட்டுள்ளோம்.
ஆபரேஷன் மறுவாழ்வு நடவடிக்கை மூலம் மீட்கப்படும் வயதான பிச்சைக்காரர்களுக்கு மட்டும்தான் அடைக்கலம். உடல்நிலை நன்றாக உள்ள பிச்சைக்காரர்கள் மனதில் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.