அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.600 கட்டணம் வழங்கப்படுமா?
நீலகிரியில் தொலைதூரங்களில் இருந்து தனியார் வாகனங்களில் அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகின்றனர். இதற்காக வழங்கப்படும் அரசு மூலம் ரூ.600 கட்டணம் கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் மீண்டும் வழங்கப்படுமா? என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரியில் தொலைதூரங்களில் இருந்து தனியார் வாகனங்களில் அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகின்றனர். இதற்காக வழங்கப்படும் அரசு மூலம் ரூ.600 கட்டணம் கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் மீண்டும் வழங்கப்படுமா? என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு தொலைதூர கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாத பகுதிகளில் இருந்து தனியார் வாகனங்களில் வருகின்றனர். பள்ளி இடைநிற்றலை தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வசதியாக பள்ளி கல்வித்துறை மூலம் மாதந்தோறும் தலா ஒரு மாணவருக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது.
மலை மாவட்டமான நீலகிரியில் குக்கிராமங்களில் இருந்து அரசு பள்ளிகள் வெகு தொலைவில் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் முதல் மாணவர்களுக்கு வாகன கட்டண தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பயனாளிகளாக உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனியாக வங்கி கணக்கு தொடங்கி, அதன் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கட்டணம் வழங்கவில்லை
இந்தநிலையில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த தனியார் வாகனங்களுக்கு கடந்த 4 மாதங்களாக கட்டணம் செலுத்தாத நிலையில், அதன் உரிமையாளர்கள் பள்ளிகளுக்கு வாகனங்கள் இயக்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருவதில் காலதாமதம் மற்றும் தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
ரூ.60 ஆயிரம் பாக்கி
அரசு பள்ளிக்கு வாகனம் இயக்கி வந்த வாகன உரிமையாளர் ரஜினி:-
நான் கடந்த சில ஆண்டுகளாக கோத்தகிரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கொரை காலனியில் இருந்து 22 மாணவ-மாணவிகளை கேர்பெட்டா அரசு நடுநிலை பள்ளிக்கு தினமும் அழைத்து சென்று வந்தேன். மாதந்தோறும் அதற்கான கட்டணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்து வந்தார். ஆனால், கடந்த 4 மாதங்களாக கட்டணம் வழங்கப்படவில்லை. ரூ.60 ஆயிரம் வாடகை பாக்கி உள்ளது. இதனால் வாகன கடன், காப்பீடு போன்றவற்றை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.
இதேபோல் மேலும் பல வாகன உரிமையாளர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை வாகன கட்டண பாக்கி உள்ளது. இதனால் தற்போது பள்ளிக்கு வாகனம் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். மாணவ- மாணவிகள் வங்கி கணக்கில் வாகன கட்டணம் செலுத்தப்பட்டால், ஒவ்வொரு பெற்றோரையும் சந்தித்து கட்டணம் பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே, தனியார் வாகனங்களுக்கான கட்டண நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயக்க வேண்டும்
கூடலூர் தாலுகா பாண்டியாறு குடோன் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி அனிதா:-
எங்கள் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான மாணவர்கள் 3½ கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சென்று வருகிறோம். கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தல்கள் உள்ளன. மேலும் 6 மாதம் தொடர் மழை பெய்யக்கூடிய பகுதியாக திகழ்கிறது. கடந்த காலங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டது.
இதனால் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வீடு திரும்பினோம். தற்போது நிதி ஒதுக்கப்படாததால் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி வழியாக பல மாணவர்கள் நடந்து சென்று வருகிறோம். இதில் மழை பெய்தால் இன்னும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே, தனியார் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல்
கோத்தகிரி அருள்நகர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சித்ராவதி:-
அரசு மற்றும் தனியார் மினி பஸ் வசதி இல்லாத பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் தனியார் வாகனங்கள் மூலம் அரசு பள்ளிகளுக்கு சென்று வந்தனர். இதற்கு அரசு மூலம் கட்டணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 மாதங்களாக வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தப்படாததால், மாணவர்களை பள்ளிக்கு குறித்த நேரத்தில் அனுப்ப முடிவதில்லை.
மேலும் சில பெற்றோர் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். கூலித்தொழிலாளர்கள் அனறாட பணிக்கு செல்வதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் உள்ளது. எங்கள் கிராமத்தில் இருந்து கடந்த 2 நாட்களாக 22 மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே, கட்டணம் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
பழைய நடைமுறை தொடர வேண்டும்
கூடலூர் தாலுகா புளியம்பாரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகமணி:-
மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகளை தினமும் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் திட்டம் அருமையானது. தற்போது மாணவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, பெற்றோர் மூலம் சம்பந்தப்பட்ட வாகன டிரைவருக்கு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக கடந்த 4 மாதமாக நிதி ஒதுக்காததால் வாகன டிரைவர்கள் பெரும்பாலான இடங்களில் பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல வருவதில்லை.
இதனால் கூடலூரில் வனவிலங்குகள் அச்சுறுத்தல், மழையில் நீண்ட தொலைதூரத்தில் இருந்து மாணவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி நடந்து சென்று வருகின்றனர்.
இந்த திட்டம் மூலம் ஆதிவாசி மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். தற்போது நிதி ஒதுக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு முறையாக வருவதில்லை. எனவே, பழைய நடைமுறைப்படி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.