பட்டாசு மூலப்பொருட்கள் விற்பனை கண்காணிக்கப்படுமா?


பட்டாசு மூலப்பொருட்கள் விற்பனை கண்காணிக்கப்படுமா?
x

அனுமதியின்றி தயாரிக் கப்படுவதை தடுக்க பட்டாசு மூலப்பொருட்களின் விற்பனையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி

அனுமதியின்றி தயாரிக் கப்படுவதை தடுக்க பட்டாசு மூலப்பொருட்களின் விற்பனையை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தயாரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுகிறார்கள்.

வரிகள் மூலம் அரசுக்கும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைத்து வருகிறது. இந்தநிலையில் சிலர் உரிய அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக பட்டாசுகளை தயார் செய்து லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி அதிகளவில் லாபம் பார்த்து வருகிறார்கள்.

மூலப்பொருட்கள்

இதற்காக சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பல இடங்களில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் உண்டாகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் அது உரிய பலனை தரவில்லை என்று கூறுப்படுகிறது.

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பவர்களுக்கு எங்கிருந்து மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அரசின் அனுமதியுடன் இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு மட்டும் மூலப்பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறி பட்டாசு மூலப்பொருட்களை வினியோகம் செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே அனுமதியின்றி தயாரிக்கப்படும் பட்டாசுகளை தடுக்க முடியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் சத்யாநகர் பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பேன்சிரக பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மிஷின்திரி, குழாய்கள் பறிமுதல் செய்து கக்கன்காலனியை சேர்ந்த தெய்வக்கனி (வயது 29) என்பவரை கைது செய்துள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் மட்டுமே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவது தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story