சேலம் விமான நிலைய விரிவாக்கத்தால் வீடுகளை இழப்போருக்கு விடிவு கிடைக்குமா?பாதியில் நிற்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
சேலம் விமான நிலைய விரிவாக்கத்தால் வீடுகளை இழப்போருக்கு விடிவு கிடைக்கும் வகையில், பாதியில் நிற்கும் வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூர்,
விமான நிலைய விரிவாக்கம்
ஓமலூர் அடுத்த காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம் பட்டி, தும்பிப்பாடி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சேலம் விமான நிலையம் சுமார் 130 ஏக்கரில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை சேலம்-சென்னை, சென்னை-சேலம் இடையே தனியார் விமான சேவை நடைபெற்றது. தற்போது எந்த விமான சேவையும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தை 560 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் போராட்டம்
குறிப்பாக விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் உள்ள கட்டிடங்கள், வீடு ஆகியவற்றை பல்வேறு கட்டமாக வருவாய், பொதுப்பணி மற்றும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தன. இந்த நிலையில் 2018-ம் ஆண்டு வாக்கில் விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் சிக்கனம்பட்டி, குப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வந்தவர்கள் என 72 பேருக்கு சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் குப்பூர் பஸ் நிறுத்தம் தாராபுரம் பிரிவு அருகே அரசால் பசுமை வீடு கட்டி கொடுக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒன்றிய நிதியில் இருந்து முதல் கட்டமாக 26 வீடுகள் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கியது.
புதர்மண்டி கிடக்கிறது
இந்த பணிகள் தொடக்க காலத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சுவர்கள் கட்டப்பட்டு கான்கிரீட் கொட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித பணியும் நடைபெறாமல் புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் புதர்மண்டி உள்ளே போக முடியாத அளவிற்கு காணப்படுகிறது.
மேலும் பாதியில் நிற்கும் கட்டிட பணி காரணமாக மதுப்பிரியர்கள், புதர்மண்டிக்கிடக்கும் இந்த கட்டிடத்தை சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு அரசால் சுமார் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீடுகள் பணி முடியாமல் புதர் மண்டி கிடப்பது வேதனையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சேலம் விமான நிலைய விரிவாக்கத்தால் வீடுகளை இழப்போருக்கு விடிவு கிடைக்கும் வகையில், பாதியில் நிற்கும் வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.
அரசு நிதி வீண்
இளையபாரதி(குப்பூர்):
சேலம் விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் சிக்கனம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சுமார் 72 பேருக்கு குப்பூர் அருகே சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கி பாதியில் நிற்கிறது. இந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் அரசு நிதி வீணாகி உள்ளது. சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படுமா? இல்லையா? என்ற பீதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் தங்களுக்காக அரசு வீடு கட்டும் பணி பாதியில் முடிவுறாமல் நிற்பதையும், அந்த கட்டிடங்கள் தற்போது புதர்மண்டி காட்சி அளிப்பதையும் வேதனையுடன் பார்க்கின்றனர். விரைவாக இந்த பணிகளை முடித்து வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
பெயர் மாற்றம்
சதாசிவம் (குப்பூர்):-
ஓமலூர் அடுத்த காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் கூறி வருவதுடன், அருகில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றைஅளவீடு செய்து வருகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை பெயர் மாற்றம் செய்யவோ, பாகப்பிரிவினை செய்யவோ முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த நிலத்தின் மூலம் வங்கியில் கடன் வாங்கவும் முடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பார்களா? இல்லையா? என்ற கேள்விக்குறியுடன் வாழ்க்கையை நடத்த வேண்டி உள்ளது. விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் வீடுகளை இழக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு அரசு சார்பில் 72 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதில் முதல் கட்டமாக 26 வீடுகள் கட்டுமான பணி தொடங்கி பாதியில் நிற்கிறது. வீடுகள் கட்டப்பட்டு வரும் இடமும் தற்போது புதர் மண்டி அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக விரோத செயல்
சீனிவாசன் (சிக்கனம்பட்டி அருந்ததியர் காலனி):
விமான நிலைய விரிவாக்கத்திற்காக விவசாயிகளுக்கு கொடுக்க கட்டிய வீடுகள் கட்டுமான பணி பாதியிலேயே நிற்கிறது. அதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. சமூக விரோத செயலுக்குத்தான் பயன்படுகிறது. எனவே அந்த கட்டுமான பணியை விரைந்து முடித்து வீடுகள் இல்லாத எங்கள் பகுதி மக்களுக்கு வழங்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், இல்லை என்றாலும் பாதி கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள் கட்டுமான பணிகளை முழுவதுமாக முடித்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு கொடுத்தால் கூட பயன் பெறுவார்கள் என்பதே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.