இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா?


தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் ஆடு, மாடுகள் மேயும் தரிசாக மாறியதாக வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் ஆடு, மாடுகள் மேயும் தரிசாக மாறியதாக வேதனை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை

டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் தஞ்சை அருகே உள்ள கல்லணையை வந்தடைந்தது. பின்னர் கல்லணையில் இருந்து ஜூன் 17-ந்தேதி திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 55 நாட்களுக்கு மேலாகிறது.

ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறை வைத்து வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இதுவரை ஒரு முறை கூட 5 நாட்கள் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை.

ஏரிகள் நிரம்பவில்லை

2 நாட்கள், 3 நாட்கள் என பெயரளவில் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கப்படவில்லை. முறை வைக்காமல் 30 நாட்கள் தண்ணீர் வழங்கினால் ஏரி, குளங்களையும் நிரப்பிவிடலாம், அதே சமயம் நாற்றுவிடும் பணியும் நிறைவடைந்துவிடும்.

நல்ல மகசூல் கிடைக்கும். ஆடிப்பட்டமும் கை கூடிவிடும் என கடைமடை விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் இதுவரை எந்தவொரு ஏரியும் நிரம்பவில்லை கடைமடை விவசாயிகள் விதை நெல்லை இது நாள்வரை கையிலெடுக்கவில்லை.

சம்பா சாகுபடி நடைபெறுமா?...

இதனால் விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாக காணப்படுவதால் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகிறது. ஆடி மாதம் 20 தேதியை தாண்டிய நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவரும் நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என கடைமடை விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். சாகுபடி நிலங்கள் அனைத்தும் மேய்ச்சல் தரிசாக மாறி வருகிறது.

இது பற்றி மறக்காவலசை விவசாயியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமாகிய பால்சாமி கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கடைமடை பகுதியில் ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருகிறோம். ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆடிப்பட்டத்தில் நீண்ட கால ரகங்களை சாகுபடி செய்து வந்தோம். நீண்ட கால ரகங்கள் சாகுபடி செலவு குறைவு என்பதாலும், நல்ல மகசூலும் கிடைத்து வந்தது.

பெரும் நஷ்டம்

கடந்த 15 ஆண்டுகளாக முறை வைத்து வழங்கப்படும் தண்ணீரால் ஆடி பட்டம் கைவிட்டு போனது.அதன் பின் பெயரளவில் குறுகிய கால ரகங்களை சாகுபடி செய்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறந்து கடைமடை பகுதியை தண்ணீர் எட்டிப் பார்க்கவில்லை. கடந்த நான்காண்டுகளாக 50 சதவீதம் நடைபெற்று வந்த சம்பா சாகுபடி, இந்த ஆண்டு நடைபெறுமா? என்பது சந்தேகமே என்றார்.மரக்காவலசையை சோ்ந்த விவசாயி கமால்பாட்சா கூறுகையில், சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந் ்தேதி திறந்து இதுநாள் வரை கடைமடை பகுதியை தண்ணீர் எட்டிப் பார்க்கவில்லை.

கடைமடைக்கு தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை

கடந்த 8 ஆண்டுகள் கடைமடை பகுதிக்கு மேட்டூர் தண்ணீர் கிடைக்காததாலும், பருவமழை பெய்யாததாலும் ஏரி, குளங்கள் வறண்டு போய்விட்டன. இதன் காரணமாக ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி நின்று போய்விட்டது.

8 ஆண்டுகள் சாகுபடியும் பொய்த்துபோய் விட்டது. கஜா புயலுக்கு பின் கடந்த 4 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து கிடைத்த தண்ணீரையும், பருவ மழையை கொண்டும் கடைமடை பகுதியில் 50 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு காவிரி நீர் கடை மடையை எட்டிப் பார்க்கவில்லை அதேசமயம் கடைமடையில் போதுமான மழையும் பெய்யவில்லை.

மேய்ச்சல் தரிசு நிலங்களாக மாறியது

மேட்டூர் அணை வெகுவாக குறைந்து வரும் நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது சாகுபடி நிலங்கள் அனைத்தும் ஆடு, மாடுகள் மேயும் மேய்ச்சல் தரிசாக மாறி வருவது வேதனை அளிக்கிறது என்றார்.


Next Story