சண்முகா நதி அணை சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணை சுற்றுலா தலமாக மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்லும் சாலையில் ராயப்பன்பட்டியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சண்முகா நதி அணை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் ஹைவேவிஸ் மலை அடிவாரப் பகுதியில் இந்த அணை அமைந்துள்ளதால் சுருளி அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த அணையின் மூலம் ஆனைமலையன்பட்டி, சின்ன ஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்யும்போது சண்முகா நதி அணைக்கு நீர்வரத்து ஏற்படும்.
இந்த அணை பகுதியில் எப்போதும் குளிர்ந்த காற்று வீசுவதோடு ஜூன் மாதத்தில் லேசான வெயிலுடன் சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து ரம்மியமாக காட்சி அளிக்கும். எனவே சண்முகா நதி அணை பகுதியை சுற்றுலா தலமாக்கி, அணையில் படகு சவாரி தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.