தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?


தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?
x

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ராணிப்பேட்டை

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பொறுமை இல்லை

சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை. அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.

அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அலங்காரம்

சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம். தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.

இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஆர். நல்லக்கண்ணு

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:-

மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது.

தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாக சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.

இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.

இவ்வாறு ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.

சிவாஜி கணேசன் சிலை

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-

என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

எழுதி வாங்க வேண்டும்

தொழிற்கூட மேற்பார்வையாளர் கே.பவி:-

சமுதாயத்துக்காக உழைத்த தலைவர்களுக்குத் தான் சிலை வைக்கிறோம். அவர்கள் எல்லோரும் இந்த சமுதாயத்துக்காக வாழ்ந்தவர்கள். தனக்காக வாழாதவர்கள். அவர்கள் சிலைகளுக்கு உரிய கவுரவத்தைக் கொடுத்தாக வேண்டும். தலைவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் மட்டும் போதாது. கோரிக்கை விடுத்து சிலை வைக்கப்பட்டாலும் சரி, அவர்களே முன்வந்து சிலை வைத்தாலும் சரி அந்த சிலைகளுக்கு உரிய கவுரவம் கொடுக்கப்பட வேண்டும். சிலைகளை வைத்துவிட்டு அதன் பிறகு அது பராமரிப்பு இல்லாமல் இருந்தால், அந்த தலைவர்களுக்கு நாம் உரிய கவுரவம் கொடுக்காமல் அவமரியாதை செய்கிறோம் என்றுதான் பொருள். எனவே சிலை வைப்பவர்களிடமும், சிலை வைக்கச்சொல்லி கோரிக்கை விடுப்பவர்களிடமும் நாங்கள் உரிய முறையில் சிலைகளைப் பராமரிப்போம் என்று எழுதி வாங்கிவிட்டு அனுமதி கொடுத்தால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

பராமரிக்க வேண்டும்

திருப்பத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இளங்கோ:-

திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி திருவுருவ சிலை உடைந்து துணி போட்டு மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கட்சி தலைவர் அவருடைய சிலை உடைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சரி செய்யாமல் உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட சிலை நிர்வாகிகள் சிலையை சீரமைத்து அங்கு வைக்க வேண்டும்.

அரக்கோணம் வழக்கறிஞர் எஸ்.தனசேகரன்:- அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள ராஜாஜி சிலையின் கைதடி உடைந்து பல மாதங்களாகிறது. அந்த சிலையினை சரி செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாமலே உள்ளது. மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதோடு இல்லாமல் அதை பராமரித்து மரியாதை செலுத்துவது அதைவிட அதிகமான தேவையாகும். சிலை வைப்பதில் உள்ள ஆர்வம், பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். அனைத்து சிலைகளையும் சிலை நிறுவியவர்கள் அதனை சார்ந்தவர்களிடம் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தகவல்கள் இல்லை

போளூரை சேர்ந்த ஏ.ஜெகன்நாதன்:- போளூரில் பஸ் நிலையம் அருகே காமராஜர், வீரப்பன் தெருவில் அண்ணா, அல்லிநகரில் எம்.ஜி.ஆர். ஆகியோர் சிலைகள் தூசிகள் படிந்து உள்ளன. இந்த தலைவர்கள் சிலைகளை நன்கு பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வந்தவாசி இரா.சுரேஷ்:- வந்தவாசி தேரடியில் உள்ள காந்தி சிலையில் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து, சிதிலமடைந்து உள்ளது. காந்தி ஜெயந்தி அன்று கூட சிலையை சுத்தம் செய்யாமல் காந்தி ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். அதேபோலவே மகாத்மா காந்தியின் சிலையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதேபோல் பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் சிலையும் சிமெண்டு பூச்சுகள் சிதைவடைந்து உள்ளன. அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் தேசத் தலைவர்களின் சிலைகளை பராமரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

ஆசிரியர் அஜீஸ்குமார்:- வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் தலைவர்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளூர் சிலை, எதிரே காந்தி சிலை மற்றும் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை, காமராஜர் சிலை, அண்ணா சிலை போன்ற சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை யார் வைத்தது என்ற கல்வெட்டு தான் அங்கு குறித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தலைவர் யார்?, அவருடைய சாதனைகள் என்ன?, கொள்கைகள் என்ன? என்பது குறித்த தகவல்கள் இடம்பெறாமல் உள்ளது. மேலும் அந்த தலைவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் மட்டுமே சிலையை சுத்தம் செய்து மாலை அணிவிக்கின்றனர். மற்ற நாட்களில் அதை கண்டு கொள்வதில்லை. எனவே சிலைகள் அமைந்துள்ள பகுதியில் பூங்கா அமைக்கப்பட வேண்டும். அங்கு வரும் பொதுமக்கள் அந்த தலைவர் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் அங்கு கல்வெட்டும் அமைக்கப்பட வேண்டும். இது வளரும் இளைய சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.


Next Story