தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கருத்து
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பொறுமை இல்லை
சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.
அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.
அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அலங்காரம்
சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.
தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.
இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஆர். நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியதாவது:-
மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது.
தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.
இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.
இவ்வாறு ஆர்.நல்லகண்ணு கூறினார்.
சிவாஜி கணேசன் சிலை
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.
மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம்.
மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.
இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.
பெயர்ந்து விழும் காரைகள்
எழுத்தூர் ராம்கி:- பொக்கிஷம் போல் பாதுகாத்து கவுரவப்படுத்த வேண்டிய சிலைகள் தற்போது அதன் கவுரவத்தை இழக்கும் வகையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வகையில் திட்டக்குடி அருகே லட்சுமணாபுரம் பஸ் நிலையம் அருகில் இருக்கும் அண்ணா சிலையும் முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, அண்ணாவின் உருவமே தெரியாத அளவிற்கு உள்ளது. அதனால் சிலையை வைப்பது மட்டும் முக்கியமல்ல, அதனை முறையாக சீரமைத்து பராமரிப்பது தான் முக்கியமாகும். அதனால் அண்ணா சிலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டுகொள்ளாத கட்சியினர்
ராஜேந்திரபட்டினம் அருட்செல்வன்:- எனக்கு விவரம் தெரிந்து பல வருடங்களாக ராஜேந்திரபட்டினத்தில் அண்ணாவின் சிலை சேதமடைந்து தான் உள்ளது. அண்ணா நினைவு நாள், பிறந்த நாளை கூட பலர் மறந்துவிட்டது போல தெரிகிறது. இதனால் இந்த சிலை கேட்பாரற்று, கைகள் இல்லாமல் கிடக்கின்றது. ஆரம்பத்தில் இந்த சிலை தி.மு.க. கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவருடைய புகைப்படத்தை மட்டும் போட்டு தலைவர் எனக் கூறிக் கொள்ளும் திராவிட கட்சிகள் அவருடைய சிலையை மட்டும் பராமரிப்பதற்கு ஏனோ கண்டுகொள்ளவில்லை. இங்கு வரும் அரசியல் கட்சியினர், இந்த சிலையை கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றனர். அதனால் சிலையை சீரமைத்து, பராமரிக்க வேண்டும்.
மக்கள் வேதனை
மங்கலம்பேட்டை பாலசுப்பிரமணியன்:- மங்கலம்பேட்டையில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில், பழைய நெசவாளர் தெரு முகப்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் சிலை உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களின்போது, இங்குள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதில் சிலையில் உள்ள ஒரு விரல் உடைந்துப் போய் சுமார் 8 வருடங்களுக்கு மேலாகியும், இதுவரை அரசியல் கட்சியினர் சீரமைக்கவில்லை.
அதேபோல், முக்கிய தருணங்களின்போது காங்கிரஸ் கட்சியினர், இங்குள்ள கடைவீதியில், கன்னிகாபரமேஸ்வரி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இருப்பினும், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் உள்ள காமராஜரின் (தற்போது பயன்பாட்டில் இல்லை) பழைய சிலைக்கு தங்க நிற வர்ணம் பூசப்பட்டு, சிலையில் கால்கள் உடைந்து, மண்ணில் புதைந்து, தெருவின் ஓரமாக, ஒரு மூலையில் கேட்பாரற்று இருக்கிறது. காமராஜர் சிலை சேதமடைந்தும், அதனை அரசியல் கட்சியினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையே என தினமும் அவ்வழியாக செல்லும் மக்கள் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர்.
முறையாக பராமரிக்க வேண்டும்
கடலூர் கோமதி:- கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தலைவர்களின் சிலைகள் உள்ளன. அவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் கிராம பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைகள் பராமரிப்பின்றி சேதம் அடைந்து காணப்படுகிறது. தலைவர்களை கவுரவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிலைகள் கேட்பாரற்று கிடப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அவர்களுக்கு பிறந்தநாள் அல்லது நினைவு நாள் வரும்போது மட்டுமே அரசியல் கட்சியினர் சிலைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கின்றனர். அதனால் சிலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்பார்ப்பு
அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிட்டது போன்று அனுமதியோடு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது.