நாகை கோர்ட்டு வளாகத்தில் துணை தபால் நிலையம் திறக்கப்படுமா?
நாகை கோர்ட்டு வளாகத்தில் உள்ள துணை தபால் நிலையம் பராமரிப்பு பணிகள் முடிந்து பூட்டி கிடைக்கிறது. இந்த தபால் நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகை கோர்ட்டு வளாகத்தில் உள்ள துணை தபால் நிலையம் பராமரிப்பு பணிகள் முடிந்து பூட்டி கிடைக்கிறது. இந்த தபால் நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
துணை தபால் நிலையம்
நாகை கோட்டத்தில் நாகை, திருவாரூரில் 2 தலைமை தபால் நிலையமும், காரைக்காலில் முக்கிய தபால் நிலையம் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
நாகை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இயங்கி வந்த துணை தபால் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஆனால் பணிகள் முடிவடைந்தும் தபால் நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
பொதுமக்கள் சிரமம்
இதன் காரணமாக நாகை, வெளிப்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தபால் அனுப்புவது, மணியாடர் செய்வது உள்ளிட்டவைகளுக்காக நாகை டவுன் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் நாகையில் உள்ள கோர்ட்டு மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் தபால் அனுப்பும் பணிக்காக தலைமை தபால் நிலையம் சென்று வருகின்றனர். இதனால் நேர விரயம் ஏற்படுகிறது.
திறக்க நடவடிக்கை
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகை கோர்ட்டு வளாகத்தில் உள்ள துணை தபால் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் நாகை மலையீஸ்வரன் வடக்கு மடவளாகத்தில் உள்ள துணை தபால் நிலையமும் இயங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.